ஊரடங்கால் திரையரங்கங்கள் மூடப்பட்டதால் திரைப்படங்களைத் திரையிடும் தொழிலில் ஐயாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் மொத்தம் ஒன்பதாயிரத்து 527 திரையரங்கங்கள் உள்ளன. இவற்றில் திரைப்படங்களைத் திரையிடுவதால் மாதந்தோறும் டிக்கெட் மூலம் ஆயிரம் கோடி ரூபாயும், துணை வருவாய் மூலம் ஐந்நூறு கோடி ரூபாயும் வருமானம் கிடைக்கிறது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு கடைப்பிடிப்பதால் திரையரங்கங்கள் மூன்றரை மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இதனால் மொத்தமாக ஐயாயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐனாக்ஸ் லெசர் தலைமைச் செயல் அதிகாரி அலோக் தாண்டன் தெரிவித்துள்ளார்.
திரையரங்கங்களை மீண்டும் திறந்தாலும் இயல்புநிலை திரும்ப மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை ஆகலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பல திரைகள் கொண்ட திரையரங்கங்களில் 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் நேரடி வேலைவாய்ப்பு பெறுவதாகவும், திரைப்படத்துறையின் மொத்த வருவாயில் 60 விழுக்காடு இவற்றின் மூலமே கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.