உயர்கல்வி பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்குத் தேர்வுகளை நடத்த இயலாது என மகாராஷ்டிர உயர்கல்வித் துறை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்குவதற்கு ஏதுவாக இணையவழியாகவோ, நேரடியாகவோ தேர்வு நடத்த வேண்டும் எனத் துணைவேந்தர்களுக்குப் பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிர உயர்கல்வித்துறை அமைச்சர் உதய் சாமந்த் வெளியிட்டுள்ள காணொலியில், 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் கலந்தாய்வு செய்தபின், கொரோனா பெருந்தொற்று சூழலில் மாநிலத்தில் இறுதியாண்டுத் தேர்வுகளை நடத்த இயலாது என முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், தேர்வுப் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் ஆகியோரின் உடல்நலம், பாதுகாப்புக் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.