காவல்துறையினர் 8 பேரை சுட்டுக்கொன்ற வழக்கில் மத்தியப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட, முதன்மைக் குற்றவாளியான விகாஸ் துபே உத்தரபிரதேச போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான். அவனை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
உத்தரப்பிரதேசத்தின் கான்பூரைச் சேர்ந்த ரவுடி விகாஸ் துபே மீது அறுபதுக்கும் மேற்பட்ட கொலை, ஆட்கடத்தல் போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதி பிக்ரூ என்னும் ஊரில் வீட்டில் பதுங்கி இருந்த அவனைப் பிடிக்கச் சென்றபோது, விகாஸ் துபேயும், அவன் கூட்டாளிகளும் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டதில் காவல்துறையைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்ற விகாஸ் துபே, அவன் கூட்டாளிகள் என 19 பேர் மீது படுகொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீசார் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையின்போது, விகாஸ் துபேயின் கூட்டாளிகள் 5 பேர் வெவ்வேறு இடங்களில் சுட்டுக் கொல்லப்பட்டனர். முதன்மைக் குற்றவாளியான விகாஸ் துபே குறித்து துப்புக் கொடுப்போருக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் அத்தொகை 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனி மகா காளி கோயிலுக்குச் விகாஸ் துபேயை அங்கிருந்த கடைக்காரர் ஒருவர் அவனை அடையாளம் கண்டு கோவில் பாதுகாவலர்களிடம் தெரிவித்தார்.
கோவில் நிர்வாகிகள் அவனிடம் அடையாள அட்டையை கேட்டபோது, போலி அடையாள அட்டையைக் காட்டி அங்கிருந்து தப்ப முயன்றுள்ளான். அதற்குள், போலீசார் அங்கு விரைந்து வந்து விகாஸ் துபேயை கைது செய்தனர். நேற்று உத்தரபிரதேச காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவனை வாகனத்தில் ஏற்றி வந்த போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிட்டு மற்றும் சுரேஷ் எனும் விகாஸ் துபேயின் இரண்டு கூட்டாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், துபேயின் குற்றச் செயல்களுக்கு ஒத்துழைத்ததாக அவனது மனைவி ரிச்சா துபே மற்றும் மூத்த மகன் ஆகியோரும் லக்னோவில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, கான்பூரில் இருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உஜ்ஜயின் வரை விகாஸ் துபே சென்றுள்ள நிலையில், போலீசாரிடம் அவன் சிக்காதது எப்படி என கேள்வி எழுந்துள்ளது. மேலும் அவனை போலிசார் கைது செய்தனரா அல்லது சரணடைந்தானா என்று முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்ப, இந்த கைது திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் என துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.