என்கவுன்டர் பயத்தினால் கான்பூர் தாதா விகாஷ் துபே தானாகவே முன் வந்து போலீஸாரிடத்தில் கைதானதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரத்தில் கான்பூர் அருகே பிக்ரு கிராமத்தில் டி.எஸ்.பி உள்ளிட்ட 8 போலீஸாரை விகாஷ் துபே என்ற தாதாவின் கும்பல் சுட்டுக் கொன்றது. அது முதலே, விகாஷ் துபே கும்பலை உத்தரபிரதே போலீஸார் வேட்டையாடி வருகின்றனர். விகாஷ் துபேவின் கூட்டாளிகள் மூன்று பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸிடத்தில் பிடிபடாமல் விகாஷ் துபே போக்கு காட்டி வந்தார். ஃபரீதாபாத்தில் ஹோட்டலில் தங்கியிருந்த விகாஷ் துபே நேற்று தப்பினார். இதையடுத்து, மத்திய பிரதேசத்தில் உஜ்ஜயினி மகாகாலஸ்வரர் கோயிலருகே வைத்து இன்று விஜய் துபேவை போலீஸார் கைது செய்தனர்.
இனிமேலும், போலீஸாரிடத்தில் போக்கு காட்டினால் தன்னை சுட்டுக் கொன்று விடுவார்கள் என்று பயந்து போன, விகாஷ் துபே , போலீஸார் தன்னை கைது செய்து கொள்ளட்டும் என்பதற்காக கோயிலருகே சதாரணமாக திரிந்துள்ளார். கோயில் பாதுகாவலர்களிடத்தில் . 'நான் விகாஷ்துபே கான்பூரிலிருந்து வந்துள்ளேன் என்னை தெரிகிறதா? 'என்று அவரே போய் கூறியுள்ளார். தொடர்ந்து, போலீஸாருக்கு தகவல் பறந்தது. மத்திய பிரதேச மாநில போலீஸார் கோயிலுக்கு வந்து அவரை கைது செய்தனர்.
விகாஷ் துபே கைதானது குறித்து மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சௌகான் கூறுகையில், குற்றவாளிகள் எவராக இருந்தாலும் மஹாகாலேஸ்வரர் காலடியில் சரணடைந்தாலும் நிச்சயம் அவர் காப்பாற்ற மாட்டார் என்று தெரிவித்துள்ளார். சமஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், 'விகாஷ் துபே சரணடைந்தாரா அல்லது கைது செய்யப்பட்டாரா' என்பதை மத்திய அரசு விளக்க வேண்டுமென்று கூறியுள்ளார்.
தனக்கு நெருக்கமானவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதையடுத்து, உயிருக்கு பயந்த விகாஷ் துபே, கோயிலில் வைத்து சரணடைந்தால், என்கவுன்டர் செய்ய வாய்ப்பு குறைவாக இருக்குமென்று கருதியே மஹாகாலேஸ்வரர் கோயிலில் வைத்து சரண் அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல,விகாஷ் துபே கைது செய்யப்பட்ட இடத்தில் மீடியாக்களும் இருந்துள்ளன. அதனால்தான், கோயில் வளாகத்தில் விகாஷ் துபே சாதாரணமாக நடமாடும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.