கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர்களிடமிருந்து பிறருக்கு நோய்த் தொற்று பரவாமல் இருக்க 80 சதவீதம் பேரை 72 மணி நேரத்திற்குள் விரைந்து தனிமைப்படுத்தி விடுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கேரளா போன்ற கட்டுப்படுத்தப்பட்ட மாநிலங்களிலும் கொரோனா மீண்டும் வேகம் எடுத்து பரவி வருகிறது.
நேற்று ஒரே நாளில் நாட்டில் 22 ஆயிரத்து 252 புதிய பாதிப்புகள் பதிவானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்தைத் தாண்டியது. இதில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் குணம் அடைந்துவிட்டனர்.
இந்நிலையில் மிகவும் விரைவாக கொரோனா தொற்றை கண்டறிவதும் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்படுவதும், சிகிச்சையளிப்பதும் கொரோனா சங்கிலியை அறுபடச் செய்ய உதவும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.