மும்பை சர்வதேச விமான நிலையத்தை நிர்வகிக்கும் ஜிவிகே குழுமம், அதன் தலைவர் ஜிவிகே,ரெட்டி, அவரது மகன் சஞ்சய் ரெட்டி மற்றும் பலர் மீது 800 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ், அமலாக்கப்பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.
மும்பை விமானநிலைய வளர்ச்சிப்பணிகளுக்கான நிதியில் சுமார் 800 கோடி ரூபாயை முறைகேடாக பயன்படுத்தியதாக கடந்த மாதம் 27 ஆம் தேதி சிபிஐ இவர்கள் மீது பதிவு செய்த எஃப்ஐஆரின் அடிப்படையில் இந்த வழக்கு போடப்பட்டுள்ளது.
விமானநிலைய அதிகாரிகள் சிலர் மற்றும் தனது ஊழியர்களின் உதவியுடன் ஜிவிகே குழுமம், பல்வேறு தவறான வழிகளில் பணத்தை மோசடி செய்து, சொந்த ஆதாயத்திற்கு பயன்படுத்தியதாக, சிபிஐ எஃப்ஐஆரில் தெரிவித்துள்ளது.
2017-18 ல் மும்பை விமான நிலையத்திற்கு நிலம் வாங்குவதாக கூறி ஒன்பதிற்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் போலி ஒப்பந்தங்களை போட்டு, அதன் வாயிலாக 310 கோடி ரூபாயை ஜிவிகே குழுமம் சுருட்டி, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்கு இழப்பை ஏற்படுத்தியதாகவும் வழக்கில் கூறப்பட்டுள்ளது.
2012 ல் இருந்து மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனத்தின் உபரி தொகையான 395 கோடியை தனது இதர நிறுவனங்களுக்கு ஜிவிகே குழுமம் பயன்படுத்தி வந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மும்பை விமான நிலையத்தின் சில்லறை வர்த்த பகுதிகளை குறைந்த வாடகைக்கு தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்கியதன் மூலம், விமான நிலைய நிறுவனத்தின் வருவாயில் இழப்பை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.