உத்தரபிரதேச மாநிலத்தில் போலீஸாருக்கு கடும் சவாலாக மாறியுள்ளார் விகாஷ் துபே என்ற தாதா. சமீபத்தில், விகாஷ் துபேவை பிடிக்க சென்ற 16 போலீஸ்காரர்களில் டி.எஸ்.பி உள்ளிட்ட 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கான்பூர் அருகேயுள்ள பிக்குரு என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. போலீஸாரை சுட்டுக் கொன்ற விகாஷ் துபே கும்பல் தப்பி ஓடி விட்டது. அவரை பிடிக்க முடியாத நிலையில் , விகாஷ் துபே பதுங்கியிருந்த வீட்டை பொக்லைன் கொண்டு போலீஸார் இடித்து தள்ளினர்.
கடந்த 1990- ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் விகாஷ் துபேயால் முதல் கொலை நிகழ்ந்தது. தொடர்ந்து உத்தரபிரதேத்தில் விகாஷ் துபே பெரிய தாதாவாக வலம் வந்தார். போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் ஆதரவும் இவருக்கு உண்டு. பகுஜன் சமாஜ், சமஜ்வாடி கட்சியினரும் விகாஷ் துபேவிடத்தில் நெருக்கம் காட்டினர். தங்களின் அரசியல் எதிரிகளுக்கு தொல்லை தர விகாஷ் துபேவை இரு கட்சிகளுமே பயன்படுத்தி கொண்டன. அரசியல் செல்வாக்கால் போலீஸாரால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. போலீஸ் துறையில் உள்ள கறுப்பு ஆடுகளும் விகாஷ் துபேவுக்கு உதவியாக இருந்தன. டி.எஸ்.பி உள்ளிட்ட 8 பேரை கொன்ற வழக்கிலும் விகாஷ் துபேவுக்கு துப்பு கொடுத்ததாக 3 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது 50 வயதான விகாஷ் துபே மீது 60 வழக்குகள் உள்ளன. தனக்கென்று தனி பாதுகாப்பு படையை உருவாக்கி வைத்துள்ள விகாஷ் துபே 2001- ம் ஆண்டு உத்தரபிரதேச மாநில அமைச்சர் சந்தோஷ் சுக்லாவை ஷிவ்லி போலீஸ் நிலையத்திலேயே வைத்து சுட்டுக் கொன்றதாக வழக்கு உள்ளது. போலீஸ் நிலையத்திலிருந்த 25 போலீஸார் முன்னிலையில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த வழக்கில் 2002- ம் ஆண்டு நீதிமன்றத்தில் விகாஷ் துபே சரண் அடைந்தார். உத்தரபிரதேச மாநிலத்தின் அரசியல் கட்சித் தலைவர்களுடன்தான் நீதிமன்றத்தில் விகாஷ் துபே சரண் அடைய வந்தார் . சிறையிலிருந்த போதே ஷிவ்ராஜ்பூர் பஞ்சாயத்து தேர்தலில் நின்று விகாஷ் துபே வெற்றி பெற்ற கூத்தும் நடந்துள்ளது. அமைச்சர் கொல்லப்பட்ட வழக்கில் சாட்சியாளர்களாக சேர்க்கப்பட்ட 25 போலீஸாரும் ஒருவர் மாறி ஒருவர் நீதிமன்றத்தில் பிறழ் சாட்சி அளித்ததால் வழக்கில் இருந்து விகாஷ் துபே விடுவிக்கப்பட்டார். அந்தளவுக்கு பண பலமும் அரசியல் செல்வாக்கும் அவருக்கு இருந்தது. தற்போது, வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக, போலீஸாரையே தற்போது விகாஷ் துபே கும்பல் சுட்டுக் கொன்றுள்ளது.
சந்தோஷ் சுக்லா கொல்லப்பட்ட வழக்கு குறித்து அவரின் சகோதரர் மனோஜ் சுக்லா கூறுகையில்,'' என் சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் விகாஷ் துபேவை போலீஸாரல் கைது செய்ய முடியவில்லை. நீதிமன்றத்துக்கு சரணடைய வந்த போதே அரசியல்வாதிகளுடன்தான் அவர் வந்தார். சம்பவத்தை நேரில் கண்ட 25 போலீஸாரும் ஒருவர் பின் ஒருவராக பிறழ் சாட்சியாக மாறினர். விசாரணை அதிகாரியே பிறழ் சாட்சி அளித்தார். முடிவில் , விகாஷ் துபே விடுதலையானார். ஆனால், இப்போது போலீஸாரேயே சுட்டுக் கொன்றிருப்பதால் நிச்சயம் விகாஷ் துபே தப்பிக்க முடியாது . யோகி ஆதித்யநாத் அரசு நிச்சயம் தண்டனை வாங்கிக் கொடுக்கும் என நம்புகிறேன்'' என்றார்.