கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் ஒருவாரக் காலத்துக்குக் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தொடங்கியுள்ளது. நகருக்கு வரும் முதன்மையான சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
கேரளத்தில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் இன்று முதல் 7 நாட்களுக்குக் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தொடங்கியுள்ளது.
மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பழக்கடைகள், மருந்தகங்கள், பால் விற்பனையகங்கள் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. நகருக்கு வரும் அனைத்துச் சாலைகளும் மூடப்பட்டுள்ளன.
மருத்துவச் சேவைகளுக்கான வாகனங்கள், உணவுப் பொருட்கள், பால் உள்ளிட்ட இன்றியமையாப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்களை இயக்க அனுமதியில்லை. ஊரடங்கை மீறிச் சாலைகளுக்கு வருவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.