கோவாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு ஹோட்டல் நிர்வாகங்கள் முயன்று வருகின்றன.
கோவாவில் கொரோனா தாக்கம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், கொரோனா இல்லை என்ற சான்றுடன் சுற்றுலா பயணிகள் வருவதற்கு அனுமதி வழங்கிய அம்மாநில அரசு, ஜூலை 2ஆம் தேதி முதல் ஹோட்டல்களை திறக்கவும் அனுமதி வழங்கியது. ஆனால் வியாழன் இரவு வரை 148 ஹோட்டல்களுக்கு மட்டுமே சுற்றுலாத்துறையிடமிருந்து வழிகாட்டு நெறிமுறைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
ஒரு சில நட்சத்திர விடுதிகள் மட்டுமே பாதுகாப்பு அம்சங்களுடன் திறக்கப்பட்டுள்ளன. அதே சமயம் சிறிய ஹோட்டல்கள் சரக்குகள் கிடைக்காமல் திணறி வருகின்றன. வரும் வாரங்களில் தான் எத்தனை ஹோட்டல்களால் நிலைமையை சமாளித்து செயல்பாட்டுக்கு வர முடியும் என்பது தெரிய வரும். சுற்றுலா பயணிகள், ஹோட்டல்களுக்கு அனுமதி வழங்கியும், கொரோனா தாக்கத்தால் கோவா சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட பாதிப்பை பெரிதாக சரி செய்துவிட முடியவில்லை எனக் கூறப்படுகிறது.