ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்துவிட்டதாகவும், கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவிற்கே சொந்தம் என்றும் பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி திடீர் பயணமாக நேற்று லடாக் சென்றார். முப்படை தளபதி பிபின் ராவத், ராணுவத் தளபதி நரவானேவுடன் ஆகியோரும் அவருடன் சென்றனர். கடல் மட்டத்தில் இருந்து 11 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள நிமு என்ற இடத்தில் ராணுவ வீரர்கள், விமானப் படை வீரர்கள், இந்தோ-திபெத் எல்லைக் காவல்படை வீரர்களுடன் மோடி கலந்துரையாடினார். கல்வானில் காயம் அடைந்த வீரர்களையும் அவர் சந்தித்தார்.
அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி, கால்வன் பகுதி இந்தியாவிற்கு சொந்தமானது என்றும்,தாய்நாட்டை காப்பதற்காக எந்த ஒரு தியாகத்தையும் செய்யத் தயார் எனவும் சூளுரைத்தார். இந்திய ராணுவத்திற்கு உலகில் யாரையும் எதிர்கொள்ளும் சக்தி உண்டு என்றும், இந்திய வீரர்களின் தீரத்தையும், சீற்றத்தையும் இந்தியாவின் எதிரிகள் கண்டுகொண்டதாகவும் அவர் கூறினார். ஆக்கிரமிப்பு காலம் மலையேறிச் சென்றுவிட்டதாகக் குறிப்பிட்ட மோடி, ஒவ்வொரு நாடும் தற்போது முன்னேற்றத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.
பிரதமர் மோடி தமது உரையில் -மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு- என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். லடாக் எல்லையை காக்கும் வீரர்களின் தீரத்தை புகழ்ந்த அவர், மறப்பண்பும், மான உணர்வும், நன்னெறியை பற்றிச் செல்லுதலும், மன்னன் அதாவது நாட்டுத் தலைமையால் வழங்கப்பட்ட சிறப்பும், படைக்கு சிறந்த பாதுகாப்பாகும் என்ற பொருள்படும் இந்த குறளை குறிப்பிட்டார்.
இந்தியர்களை, புல்லாங்குழல் வைத்துள்ள கிருஷ்ணர்கள் என்று வர்ணித்த மோடி, தேவைப்பட்டால் சுதர்சன சக்கரத்தையும் பயன்படுத்த தயங்க மாட்டோம் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.