2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நாட்டில் 109 வழித்தடங்களில் தனியார் ரயில்களின் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பயணிகள் ரயில்சேவையில் ஏற்படும் நஷ்டத்தை குறைக்கும் நோக்கில், தனியார் ரயிலை இயக்குவதற்கான செயல்திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. சோதனை முயற்சியாக டெல்லி, உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் இயக்கப்பட்ட தனியார் ரயில்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை தொடர்ந்து, அந்த சேவையை மேலும் அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் அதிகபட்சமாக 16 பெட்டிகளை கொண்ட ரயில்கள் 109 வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன.
இதில், டெல்லி மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய பகுதிகளுக்கு தலா 13 ஜோடி ரயில்களும், சென்னைக்கு 12 ஜோடி ரயில்களும், ஹவுரா, பாட்னா மற்றும் செகந்திராபாத் பகுதிகளுக்கு தலா 10 ஜோடி ரயில்களும் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் இந்திய தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும், பயணிகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதைத் தலையாயக் கடமையாகக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ரயில்வே பரிந்துரை செய்துள்ள தரம், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பரமாரிப்பு ஆகியவற்றுடன் சரியான நேரத்திற்கு புறப்படுதல், குறித்த நேரத்தில் சென்றடைதல், ரயிலின் உள்ளே தூய்மையை கடைப்பிடித்தல் உள்ளிட்டவற்றிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேசமயம், தனியார் ரயில் சேவையில் குறிப்பிட்ட பகுதிகளுக்கான கட்டணம், அப்பகுதிகளுக்கான விமானம் மற்றும் ஏசி பேருந்துகளின் கட்டணத்தை பொறுத்து, தனியார் நிறுவனங்களாலேயே நிர்ணயிக்கப்படும் என, ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார்.
தேர்வு செய்யப்படும் தனியார் நிறுவனங்கள் தங்களுக்கென ஒதுக்கப்படும் வழித்தடங்களில், அதிகபட்சமாக 35 ஆண்டுகள் ரயிலை இயக்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட உள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் தனியார் நிறுவனங்களிடம் இருந்து 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.(