நாட்டில் கொரோனா தொற்றை கண்டறிய நடத்தப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை விரைவில் ஒரு கோடியை எட்ட உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை சுமார் 91 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
135 கோடி மக்கள் தொகையை கொண்டுள்ள நாட்டில் 6 லட்சம் பேருக்கு கொரேனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அதனால் மக்கள் பீதி அடைய தேவையில்லை என்றார்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் குணமடைந்து விட்டதாகவும், மேலும் பலர் வீடு திரும்பும் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
உலக அளவில் ஒப்பிடும் போது இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 2.94 சதவீதம் என்ற குறைந்த விகிதத்தில் இருப்பதாகவும், குணமடைவோர் விகிதம் ஏறத்தாழ 60 சதவீதம் என்ற அளவில் உள்ளது என்றும் கூறினார்.
இந்தியாவில் கொரோனா தொற்று இரட்டிப்பாகும் காலம் 21 முதல் 22 நாட்களாக இருக்கிறது என்றும் தெரிவித்தார். வைரஸ் தொற்றை கண்டறிய ஆரம்பத்தில் ஒரே ஒரு ஆய்வகம் இருந்த நிலையில் தற்போது 1065 ஆய்வகங்கள் இருக்கின்றன என்றும் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் குறிப்பிட்டார்.