இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள முதலாவது கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் இந்த மாதம் ((Covaxin)) மனிதர்களிடம் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைக்கு ஆட்படுத்தப்பட உள்ளது.
ஐசிஎம்ஆர், புனே என்ஐஏ ஆய்வகத்துடன் இணைந்து ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் இந்த தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. விலங்குகளிடம் நடத்தப்பட்ட பல்வேறு கட்டசோதனைகளுக்குப் பிறகு அடுத்த கட்டமாக மனிதர்களிடம் சோதித்துப் பார்க்க இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார்.
முதல் கட்ட பரிசோதனை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களிடம், குறிப்பிட அளவிலான டோசுகளுடன் நடத்தப்படும். அதில் கிடைக்கும் முடிவுகள் மற்றும் பக்கவிளைவுகளின் அடிப்படையில் இரண்டாம் கட்ட சோதனை சற்று அதிக எண்ணிக்கையில் நடக்கும்.
இந்த இரண்டு கட்டங்களும் வெற்றி பெற்றால் மூன்றாம் கட்ட சோதனை ஆயிரக்கணக்கானவர்களிடம் நடத்தப்படும். அதில் கிடைக்கும் முடிவுகள் உன்னிப்புடன் ஆராயப்பட்டு அதன் பின்னரே உரிமம் கிடைக்கும்.