உலகின் அழகிய எழுத்துகள் கொண்டதாக தெலுங்கு மொழி'யை சர்வதேச எழுத்துக்கள் சங்கம் தேர்ந்தெடுத்திருக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஒரு செய்தி வைரலாகப் பரவி வருகிறது. தெலுங்கு மொழி மக்கள் இந்த செய்தியை பெருமையுடன் பகிர்ந்து வருகிறார்கள்.
சுந்தரத் தெலுங்கு என்றும் இசை மொழி என்றும் கருதப்படும் தெலுங்கு மொழி, அழகிய எழுத்து கொண்ட மொழி என்று தேர்வு செய்யப்பட்டது உண்மையா என்று ஆராய்ந்தால் உண்மையான செய்தியில்லை என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. முதலில், சர்வதேச எழுத்துக்கள் சங்கம்' என்ற பெயரில் எந்த அமைப்பும் செயல்டபவில்லை. 2012 - ம் ஆண்டு பாங்காங்கில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் எழுத்துக்கள் போட்டியில் தெலுங்கு மொழி இரண்டாவது இடத்தைப் பெற்றதாகவும் சொல்லப்பட்டது.
'Telungu second best script' என்று தேடினால் நமக்கு கொரியன் இணையதளம் ஒன்றில் அக்டோபர் 2012 - ம் ஆண்டு வெளியிடப்பட்ட செய்தி ஒன்று கிடைத்தது. அதில், பாங்காங்கில் 4 நாள்கள் நடைபெற்ற உலக எழுத்துக்கள் ஒலிம்பிக் போட்டியில் (World Alphabet Olympics) கொரிய எழுத்தான ஹங்குல் எழுத்து முதல் இடத்தையும், தெலுங்கு எழுத்து இரண்டாவது இடத்தையும், ஆங்கிலம் மூன்றாவது இடத்தையும் பெற்றதாக சொல்லப்பட்டிருந்தது. இதில், 27 போட்டியாளர்கள் மட்டுமே பங்கேற்றனர். இந்த செய்தியானது ITCSA (Indian Telugu Civil Servants Association) இணையதளத்திலும் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த செய்தியில் குறிப்பிட்டிருக்கும் International Alphabet Association அமைப்பைப் பற்றித் தேடினால் international Phonetic Association எனும் அமைப்பைப் பற்றிய தகவல்கள் மட்டுமே கிடைக்கின்றன. இது மட்டுமல்லாமல் உலக எழுத்துக்கள் ஒலிம்பிக் நிகழ்வு நடந்தது குறித்த எந்தவிதமான செய்திகளும் இணையதளங்களில் கிடைக்கவில்லை.
கடந்த 2012 - ம் ஆண்டில் போட்டியின் முடிவைத் திரித்து, 8 வருடங்களுக்கு பிறகு, தற்போது அழகான எழுத்தைக் கொண்ட இரண்டாவது மொழியாக தெலுங்கு' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்கிற தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது.