இந்தியா தன்னை பதவியிலிருந்து நீக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு முன்வைத்த நேபாள பிரதமர் சர்மா ஒளி பதவி விலக வேண்டும் என அவர்சார்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
புதுப்பித்து வரையப்பட்ட நேபாள நாட்டின் அரசியல் வரைபடத்தில் இந்திய பகுதிகளும் இடம்பெற்றிருந்ததற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
இதனால் தன்னை பதவியிலிருந்து நீக்க இந்தியா முயற்சிப்பதாக நேபாள பிரதமர் சர்மா ஒளி குற்றம்சாட்டினார். அவரது குற்றச்சாட்டு அரசியல் மற்றும் ராஜதந்திர ரீதியில் முறையானது அல்ல என, முன்னாள் பிரதமர் பிரச்சாந்தா தெரிவித்துள்ளார்.
செவ்வாயன்று நடைபெற்ற ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்ற மூத்த தலைவர்கள், பிரதமரின் இது போன்ற கருத்துகள் அண்டை நாட்டுடனான நல்லுறவை பாதிக்கும் என்றனர்.
மேலும் தனது குற்றச்சாட்டுக்கு தகுந்த ஆதாரம் அளிக்காத பட்சத்தில் சர்மா தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.