இந்தியா -சீனா இடையேயான வர்த்தக கொள்கைகளை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
லடாக் எல்லையில் இந்தியா-சீன படைகள் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். எல்லையில் அமைதி திரும்ப இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அதேசமயம், சீன பொருட்களுக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஒரு புறம் வலுத்து வருகிறது. டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், இந்திய-சீனாவுடனான வர்த்தக கொள்கைகளை வெளியிடுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.