ஹைதராபாத்தில், கொரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்காக அரசு செஸ்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 34 வயது இளைஞர் ஒருவர், மருத்துவர்கள் அலட்சியத்தால் வெண்டிலேட்டர் நீக்கப்பட்டு, மூச்சுத் திணறி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வெண்டிலேட்டர் நீக்கப்பட்ட பிறகு அந்த இளைஞன் தன் அப்பாவுக்கு அனுப்பி வைத்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியிருக்கிறது.
"அப்பா என்னால மூச்சு விட முடியல. நான் கெஞ்சி கேட்டுக்கிட்டேன். அப்படியும் அவுங்க வென்டிலேட்டரை நீக்கி, ஆக்சிஜன் சப்ளைய நிப்பாட்டிட்டாங்க. மூணு மணி நேரமா மூச்சுவிட சிரமப்பட்டுக்கிட்டு இருக்கேன். இதுக்கு மேலயும் என்னால மூச்சு விட முடியாது டேடி. என்னோட இதயம் நிக்க போகுது. பாய்..." என்று கடைசியாக மூச்சுவிட முடியாமல், சிரமத்துடன் பேசி தனது தந்தைக்கு அனுப்பி வைத்த வீடியோ வைரலாகியிருக்கிறது.
இந்த சம்பவம் குறித்து இறந்தவரின் தந்தை, "என்னோட மகன் உதவி கேட்டான். யாருமே உதவி செய்யல. இனி என்னோட மகன் எங்க கூட இறுக்கப் போறதில்ல. என்னோட மகனுக்கு ஆக்சிஜன் ஏன் கொடுக்கல? வெண்டிலேட்டர அவன் கிட்டேருந்து எடுக்க காரணம் என்ன? மூச்சுவிட சிரமப்பட்டுக்கிட்டு என்னோட மகன் பேசுனது பார்த்தப்போ என்னோட இதயமே நொறுங்கி போச்சு" என்று அழுது உடைந்தபடி தன் மகனது இறப்புக்கான காரணத்தைத் தேடுகிறார்.
மருத்துவமனை தரப்பில், “அவருக்கு ஏற்கெனவே இதயப் பிரச்னை இருந்தது. மருத்துவர்கள் தரப்பில் எந்த தவறும் இல்லை” என்று விளக்கம் அளித்திருக்கிறார்கள்.
இறந்தவருக்கு 12 வயதில் ஒரு மகளும், 9 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஹைதராபாத்தில் கொரோனா நோய் தொற்று நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில், மருத்துவமனையில் வெண்டிலேட்டர் நீக்கப்பட்டதால் இறந்தவர் வெளியிட்ட வீடியோ சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானாவில் மட்டும் 14,000 க்கும் மேற்பட்டோர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சுமார் 250 பேர் இறந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.