லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா - சீனா இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், இந்தியா ஜப்பான் நாட்டுடன் இணைந்து இந்தியப் பெருங்கடல் பகுதியில் போர் ஒத்திகையில் ஈடுபட்டது.
இந்தியப் பெருங்கடலில், இந்தியா கடற்படையை சேர்ந்த ஐ.என்.எஸ் ராணா மற்றும் ஐ.என்.எஸ் குலிஷ் ஆகிய போர்க் கப்பல்கள் ஜப்பான் கடற்படையின் ஜே.எஸ் காஷ்மீர் மற்றும் ஜே.எஸ் ஷிமாயுகி கப்பல்களுடன் போர் ஒத்திகையில் ஈடுபட்டன. சில தினங்களுக்கு முன்பு ஜப்பான் கடற்படை போர்க்கப்பல்கள் அமெரிக்கக் கடற்படையுடன் போர் ஒத்திகையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
சீன ராணுவம் ஜப்பானிய கடற்படையுடன் அவ்வப்போது பிரச்னையில் ஈடுபட்டு வருகிறது. சீனா உரிமை கோரி தகராறு செய்யும் சில தீவுகளில் ஜப்பானின் உரிமையை நிலைநாட்டும் வகையில் அந்த நாட்டு அரசு சில நிர்வாக நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. டோக்கியோவிலிருந்து 1931 கி.மீ தொலைவில் உள்ள டோனோஷிரோ எனும் பெயருடைய தீவுகளின் பெயரை டோனோஷிரோ சென்காகு என்று ஜப்பான், இஷிகாகி நகர சபை மாற்றியுள்ளது. மேலும், தீவின் அடிப்படைக் கட்டமைப்புகள் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் சில சீர்திருத்தங்களையும் மேற்கொண்டுள்ளது ஜப்பான்.
ஜப்பான் நாட்டின் சட்டப்படியான நடவடிக்கைக்குச் சீனா கடுமையான எதிர்த்துள்ளது. "இது போன்ற நடவடிக்கைகள் மூலம் கிழக்கு சீனக் கடலில் அமைதியின்மையை உருவாக்குவதை ஜப்பான் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கண்டனம் தெரிவித்துள்ளது சீனா.
பிரச்னைக்குரிய இந்தத் தீவு பகுதி கிழக்கு சீனக் கடலில் ஜப்பான், சீனா மற்றும் தைவான் நாடுகளுக்கு இடையே அமைந்திருக்கிறது. இந்த தீவுக்கூட்டங்கள் தொடர்பாக நூற்றாண்டு காலமாக இரு நாடுகளுக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. இரண்டு நாடுகளுமே இந்தத் தீவுக் கூட்டங்களுக்கு உரிமை கோருகின்றன. இது அவ்வப்போது மோதல் போக்கை உருவாக்குகிறது.
இந்தப் பிராந்தியத்தில் ஜப்பான் தனது கடல் வலிமையை நிரூபிக்கும் விதமாக அவ்வப்போது போர்ப் பயிற்சி மற்றும் ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறது. அதன் விளைவாகவே தனது வல்லமையை நிரூபித்து சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கக் கடற்படையுடன் சேர்ந்து கூட்டு ராணுவ போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறது.