சர்தார் பட்டேல் பெயர் சூட்டப்பட்ட இந்த மருத்துவமனை தலைநகரில் சாஹத்புர் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நாளுக்கு நாள் பெருகி வரும் கொரோனா பாதிப்புகளால் மருத்துவமனைகளில் இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து, 10 ஆயிரம் படுக்கைகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனை மிகப்பெரிய ஆறுதலாகும்.
லேசான மற்றும் மிதமான நோய்த்தொற்று உள்ளவர்களை குணப்படுத்தவும் தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்கு ஆக்சிஜன் வெண்டிலேட்டர் போன்ற சாதனங்களையும் இந்த மருத்துவமனையில் பெற முடியும். 875 மருத்துவர்கள் மற்றும் அதே எண்ணிக்கையிலான செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களையும் நியமனம் செய்ய டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது.
இன்னும் 4 நாட்களில் திறக்கப்பட உள்ள இந்த மருத்துவமனையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அமித் ஷா தமது டிவிட்டரில், மருத்துவமனையை இயக்க உள்ள இந்தோ திபெத் எல்லை காவல்படைக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு பேரிடர் காலத்தில் நாட்டு மக்களுக்கு எல்லாவகையான மருத்துவ வசதிகளையும் செய்து தர தயாராக இருப்பதாகவும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.