தீவிரமான பாதிப்பு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, டெக்சாமெத்தசோன் (dexamethasone) எனப்படும் விலை குறைந்த மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளின் உயிர் காக்க இந்த மருந்து பயன்படுவதாக, பிரிட்டன் மருத்துவ பரிசோதனைகளில் கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து, தீவிரமான பாதிப்புள்ள அல்லது உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மட்டும், மருத்துவ கண்காணிப்பின் கீழ் டெக்சாமெத்தசோனை வழங்கலாம் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மருத்துவர்களுக்கு வழங்கியுள்ள பரிந்துரையில், மிதமான மற்றும் தீவிரப் பாதிப்புள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, மீத்தைல்பிரட்னிசோலோன் (methylprednisolone) மருந்துக்கு மாற்றாக, டெக்சாமெத்தசோன் பயன்படுத்தலாம் என அனுமதித்துள்ளது.