ஆந்திராவில் ஒரு ரூபாயில் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு திட்டம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையை அரசே செலுத்தும்.
கடந்த தெலுங்கு தேச கட்சியின் ஆட்சியில் விவசாயிகளுக்கு வழங்கப்படாமலிருந்து பயிர் காப்பீடு தொகையான ரூ. 596.36 கோடியை ஜெகன்மோகன் அரசு விடுவித்துள்ளது. இந்தத் தொகை மாநிலத்தின் 5,94,005 விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் செலுத்தப்படவுள்ளது. இது குறித்து வீடியோ கான்ஃபரன்ஸிங் வழியாக விவசாயிகளிடத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ''ஒய்.எஸ்.ஆர். பயிர்க்காப்பீடு திட்டம் என்ற பெயரில் விவசாயிகளுக்காக புதிய பயிர்காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஒரு ரூபாய் மட்டும் பிரீமியமாக கட்டினால் போதும். மீதித் தொகையை அரசு செலுத்தி விடும்.
கடந்த முறை ஆட்சியிலிருந்த தெலுங்கு தேச அரசு 2018-19 ஆண்டுக்கான காப்பீட்டு பிரீமியத்தை செலுத்தவில்லை. பொதுவாக, காப்பீட்டு பிரீமியம் விவசாய சீசன் துவங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே செலுத்தப்பட்டு விட வேண்டும். ஆனால் 2018-19 ஆண்டு காரி பருவத்தின் போது மத்திய அரசு பங்களிப்பை அளித்த போதும் மாநில அரசு தமது பங்களிப்பான ரூ.122 கோடி தொகையை அளிக்கவில்லை. இத்தகையை இடர்பாடுகளைத் தவிர்க்க மாநில அரசே இனிமேல் விவசாயிகளுக்கான பயிர்க்காப்பீட்டை செலுத்தும். குறைந்தத் தொகையாக விவசாயிகளிடத்திலிருந்து ஒரு ரூபாய் மட்டும் பெற்றுக் கொள்வோம். விவசாயிகளின் பெயரில் அரசு செலுத்தும் தொகையை வங்கிகள் அவர்கள் வாங்கிய வேறு கடனுக்காகக் கழிக்கக் கூடாது. வங்கிகளின் நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிப்பார்கள்'' என்றார்.
புதிய பயிர்க்காப்பீடு திட்டத்தால் ஆந்திர விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்...