யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் கொரொனோவைக் குணப்படுத்தும் என்று அறிமுகப்படுத்தப்பட்ட கொரோனில் மற்றும் சுவாசரி மருந்துகளை, யார் அனுமதி பெற்று ராஜஸ்தான், ஜெய்ப்பூர் நோயாளிகளிடம் பரிசோதனை செய்தீர்கள் என்று தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது ராஜஸ்தான் சுகாதாரத்துறை.
இந்த நிலையில், NIMS நிறுவனத்தின் தலைவர் மருத்துவர். பி.எஸ்.தோமர், "பதஞ்சலியின் கொரோனா மருந்துகளை எங்களது மருத்துவமனைகளில் எங்குமே பரிசோதனை செய்யவில்லை. இன்னும் சொல்லப்போனால், எங்களது மருத்துவமனைகளில் 100 % கொரோனா நோய் அறிகுறிகள் இல்லாதவர்களே அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களுக்குப் பதஞ்சலி ஸ்பான்சராக அளித்த ஆயுர்வேதம் மருந்துகளை அளித்துக் குணப்படுத்தினோம். மற்றபடி நாங்கள் எந்த புதிய மருந்தையும் தயாரிக்கவில்லை. அதன் பெயர் கூட எங்களுக்குத் தெரியாது" என்று பதஞ்சலிக்கு எதிராக டுவிஸ்ட் அடித்திருக்கிறார்கள்.
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், கொரோனில், சுவாசரி மருந்துகளை கொரோனா நோயைக் குணப்படுத்தும் என்று கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. இந்த மருந்துங்களை தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனத்துடன் (NIMS - ஜெய்ப்பூர் ) இணைந்து தயாரித்ததாகவும் கூறியிருந்தது. கொரோனாவுக்கான எதிர்ப்பு மருந்தை டெல்லி, அகமதாபாத், மீரட், ஜெய்ப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள NIMS நிறுவனத்தின் மருத்துவக் கிளைகளில் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது. இந்த மருந்து ஏழு நாட்களில் கொரோனாவைக் குணப்படுத்தும் என்றும் கூறியது பதஞ்சலி நிறுவனம்.
ஏற்கெனவே, உத்ராகாண்ட் அரசு பதஞ்சலி நிறுவனம் மருந்து விற்பனை மற்றும் உரிமை பெறுவதற்கு அளித்த விண்ணப்பத்தில் எங்குமே 'கொரோனா நோயைக் குணப்படுத்தும் என்று குறிப்பிடவில்லை. காய்ச்சல், சளியைக் குணப்படுத்தும்' என்றே விண்ணப்பம் செய்தார்கள். அதன் அடிப்படையிலேயே விற்பனை உரிமம் வழங்கப்பட்டது என்று கூறியிருந்தது.
இந்த நிலையில் பதஞ்சலி நிறுவனத்தின் அறிவிப்புக்கு எதிராக மருத்துவர். பி.எஸ்.தோமர் கருத்து கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.