ரயில்வேயின் 160 உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய 6 மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள், ஊர்ப்புற மக்களின் நலனுக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக 6 மாநிலங்களிலும் ரயில்வே துறையில் 160 உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் வினோத்குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டங்களில் பணியாற்ற எட்டாயிரத்து 828 பேர் தேவைப்படுவதாகவும், 125 நாட்களுக்கு வேலை என்கிற கணக்கில் மொத்தம் 8 லட்சத்து 67 ஆயிரத்து 675 மனித உழைப்பு நாட்கள் வேலை வழங்கப்படும் எனத் குறிப்பிட்டுள்ளார். ஆயிரத்து 888 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.