யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனம் கொரோனா நோய்த் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகக் கூறி, ‘கொரோனில்’ எனும் மருந்தை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில், உத்ராகண்ட் அரசு, கொரோனில் மருந்துக்கான விண்ணப்பத்தில் எங்குமே பதஞ்சலி நிறுவனம், ‘இது கொரோனா நோய்க்கான மருந்து’ என்று குறிப்பிடவில்லை என்று தெரிவித்திருக்கிறது.
செவ்வாய்க் கிழமையன்று பதஞ்சலி நிறுவனம் கொரோனில், சுவாசரி மருந்தை வெளியிட்ட உடனே மத்திய அரசு, 'பதஞ்சலியின் மருந்து கொரோனா நோயைக் குணப்படுத்தும் என்பது நிரூபிக்கப்படும் வரை பதஞ்சலியின் விளம்பரத்தை நிறுத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
மத்திய அரசும் உத்தராகாண்ட் மாநில அரசிடம் பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் மற்றும் ஸ்வசரி மருந்து பற்றிய தகவல்களையும் உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய உரிமை அளித்த விவரத்தையும் கேட்டிருந்தது. "பதஞ்சலி நிறுவனம் அளித்த விண்ணப்பத்தின் அடிப்படையில் விற்பனை உரிமையை வழங்கினோம். விண்ணப்பத்தில் எங்குமே கொரோனா வைரஸ் பற்றிக் குறிப்பிடவில்லை. உடல் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்கும், காய்ச்சல் மற்றும் இருமலைக் குணப்படுத்தும் என்பதன் அடிப்படையிலேயே விண்ணப்பத்தை ஏற்று உரிமை வழங்கினோம்" என்று விளக்கமளித்திருக்கிறது.
பதஞ்சலி நிறுவனம் தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனத்துடன் (NIMS - ஜெய்ப்பூர்) எனும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து கொரோனாவுக்கு எதிரான மருந்தைக் கண்டுபிடித்ததாகவும் டெல்லி, அகமதாபாத், மீரட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள NIMS நிறுவனத்தின் மருத்துவமனைகளில் இந்த மருந்து வெற்றிகரமாகப் பரிசோதனை செய்யப்பட்டது என்றும் கூறியிருந்தது. ஆனால், பரிசோதனை செய்யப்பட மருத்துவ புள்ளி விவரங்களை இதுவரை பதஞ்சலி நிறுவனம் வெளியிடவில்லை.
இது குறித்து மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக் , "பதஞ்சலி நிறுவனம் அளிக்கும் மருத்துவ விவரங்களைக் கொண்டே மத்திய அரசின் அங்கீகாரம் குறித்து முடிவு செய்யப்படும்" என்று கூறியிருந்தார்.
பதஞ்சலி நிறுவனத்தின் சி.இ.ஓ ஆச்சார்ய பாலகிருஷ்ணா, "பரிசோதனை முடிவுகளை ஏற்கெனவே மத்திய அரசுக்கு அனுப்பிவைத்துவிட்டோம். ஆனால், தகவல் தொடர்பு பிரச்னையால் மத்திய அரசுக்கு மருந்து குறித்த தகவல்கள் கிடைக்காமல் போயிருக்கலாம்" என்று டுவீட் செய்திருந்தார்.