கொரோனா வைரஸ் மனிதர்களிடத்தில் இருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மையுடையது. இதனால், நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர்கள் , செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் பி.பி.இ போன்ற பாதுகாப்பு உடை கையில் கிளவுஸ்கள் முகத்தில் மாஸ்க் அணிந்தே பணியாற்றுகிறார்கள் . பி.பி.இ உடை அணிந்தால் உடலில் உள்ளே வியர்ந்துக் கொட்டும். சிறுநீர் போன்ற இயற்கை உபாதைகளை கழிப்பதும் கூட கடினம்.
மேலும், 6 மணி நேரத்துக்கு பிறகு இந்த உடைகளை அணியவும் கூடாது. இப்படியான ஒரு இக்கட்டான சூழலில் மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனா நோயாளிகளை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் , பி.பி.இ உடை அணிந்து 10 மணி நேரம் பணியாற்றிய டாக்டர் ஒருவரின் கரங்களின் உள்பாகத்தை படமெடுத்து ஐ.ஏ.எஸ் அதிகாரி அவானிஷ் ஷரன் ட்விட்டரில் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
தன்பதிவில், ''இது ஒரு டாக்டரின் கை. சுமார் 10 மணிநேர பணிக்கு பிறகு கையுறைகளை கழற்றிய பின்னர் அவரின் கை இந்த நிலையில் இருக்கிறது. கொரோனாவுக்கு எதிராக களத்தில் முன்னின்று போராடும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை'' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவு ட்விட்டரில் வைரலானது. கிட்டத்தட்ட 46,000 பேர் லைக் செய்தனர். 8,100 முறை ரீட்விட் செய்யப்பட்டிருந்தது. கமாண்ட்களில் ஆயிரக்கணக்கானோர் மருத்துவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்திருந்தனர். கொரோனா வைரஸ் தாக்கி ஏராளமான டாக்டர்களும், செவிலியர்களும் கூட பலியாகியிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.