கடந்த வாரத்தில் பதஞ்சலி நிறுவனம் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக அறிவித்திருந்தது. இதற்கான ஆதாரத்தை இன்னும் 7 நாள்களில் வெளியிடுவதாகவும் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆச்சார்யா பாலகிருஷ்ணா கூறியிருந்தார். அதன்படி, இன்று பதஞ்சலி கொரோனாலி என்ற பெயரில் கொரோனா நோயை குணப்படுத்த புதிய மருந்து அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹரித்துவாரில் நடந்த நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் கூறுகையில், '' இந்த மருந்து 280 நோயாளிகளிடத்தில் பரிசோதிக்கப்பட்டது. கொடுக்கப்பட்ட 69 சதவிகித கொரோனா நோயாளிகள் 3 நாள்களில் குணமடைந்தனர். 7 நாள்களில் அனைத்து நோயாளிகளும் 100 சதகிவிதம் குணமடைந்தனர். இந்த மருந்தை கொடுத்து பரிசோதித்த .நோயாளிகளில் ஒருவர் கூட இறக்கும் நிலை ஏற்படவில்லை. பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனத்துடன் சேர்ந்து ஜெய்ப்பூரிலுள்ள தேசிய மெடிக்கல் சயின்ஸஸ் நிறுவனத்தை சேர்ந்த ( நிம்ஸ்) 500 விஞ்ஞானிகள் இணைந்து இரவு பகலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு இந்த மாத்திரையைக் கண்டுபிடித்துள்ள்ளனர். அஸ்வகந்தா, துளசி கலவையிலிருந்து தயாரிக்கப்படும் கொரோனில் மருந்து கொரோனா வைரஸ் தொற்றுக்கான முதல் சான்று அடிப்படையிலான ஆயுர்வேத மருந்து ஆகும்'' என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக. பதஞ்சலி தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், ''இந்த மருந்து தாதுக்கள் மற்றும் மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது, 30 நாள்கள் பயன்படுத்தக் கூடிய கொரோனா மருந்து கிட் கூட கிடைக்கும். நாங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது பற்றி யோசிக்கவில்லை. நோயை குணப்படுத்துவது குறித்து ஆராய்ந்தோம். அதில் வெற்றி கிடைத்துள்ளது'' என்றார்.
இந்த மாத்திரை அடங்கிய பாக்கெட் ரூ. 600- க்கு கிடைக்கும். 2- 2 மாத்திரைகளை உணவு உண்ட 30 நிமிடங்களுக்கு பிறகு சுடுநீரில் கலந்து சாப்பிட வேண்டும். இது 15 முதல் 80 வயது வரை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய அளவு. 6 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் இதில் பாதி எடுத்துக் கொண்டால் போதுமானது என்று பதஞ்சலி நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் 4,40,215 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14,011 பேர் உயிரிழந்துள்ளனர். 1,78,014 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ள நிலையில், மற்றவர்கள் குணமடைந்துள்ளனர்.