டெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறையினர் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து டெல்லி போலீஸார் கண்காணிப்பையும், பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளனர்.
டெல்லியில் தாக்குதல் நடத்தும் நோக்கில் 5 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதால், டெல்லி பாதுகாப்பையும், கண்காணிப்பையும் பலப்படுத்த வேண்டும் என்று உளவுத்துறையால் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் டெல்லியில் உள்ள 15 மாவட்ட போலீஸாரும் நேற்று இரவிலிருந்து பாதுகாப்பையும், வாகனங்கள் தணிக்கையையும், அதிகப்படுத்தியுள்ளனர். மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களான காய்கறிச்சந்தைப் பகுதி, மருத்துவமனைகள், பேருந்து நிலையம் ஆகியவற்றில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு ஏராளமான நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருவதால், நோயாளிகள் வேடத்தில் தீவிரவாதிகள் சென்றுவிடக்கூடாது என்றும் போலீஸார் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லியில் வரும் காஷ்மீர் பதிவு எண் கொண்ட வாகனங்கள், கார்களை போலீஸார் தீவிரமாக சோதனை செய்தபின்பே அனுமதிக்கின்றனர். டெல்லியில் உள்ள தங்கும்விடுதிகள், ரெஸ்டாரண்ட்கள், விருந்தினர் இல்லங்கள் போன்றவற்றில் நேற்று இரவிலிருந்து போலீஸார் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.