உத்தரப் பிரதேசம், கான்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு சிறுமிகள் காப்பகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 57 பேருக்குக் கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிறுமிகளில் ஐந்து பேர் கருத்தரித்திருப்பதும், ஒரு பெண்ணுக்கு ஹச்.ஐ.வி. நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சம்பவம் குறித்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த கான்பூர் மாவட்ட ஆட்சியர் ராம் திவாரி, "இந்தக் காப்பகத்தில் ஏழு கர்ப்பமான சிறுமிகள் வசித்து வந்தார்கள். அவர்களில் ஐந்து பேருக்கு கோவிட் - 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தச் சிறுமிகள் காப்பகத்துக்கு அழைத்து வரப்பட்டபோதே கருத்தரித்திருந்தார்கள். குழந்தைகள் நல அமைப்பு பரிந்துரை செய்யப்பட்டதன் பேரில் அவர்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்கள். குழந்தைகள் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் ஏதாவது நிகழ்ந்ததா என்று விசாரித்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
கான்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் தினேஷ் குமார், "இவர்களில் இரண்டு சிறுமிகள் 2019 - டிசம்பர் மாதத்தில் ஆக்ரா மற்றும் கண்ணுஜ் பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டனர். தற்போது இந்த சிறுமிகள் கான்பூர் மருத்துவக் கல்லூரிக்கு கொரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த சிறுமிகள் குறித்து பல்வேறு வதந்திகள் நிலவுகின்றன. இவர்கள் காப்பகத்துக்குக் கொண்டுவரப்பட்ட பிறகு தான் கருத்தரித்திருக்கிறார்கள் என்பதில் எந்தவித உண்மையும் இல்லை. அனைத்து ஆவணங்களையும் சோதனை செய்துவிட்டோம். முசாஃபர்பூரில் ஏற்பட்டதைப் போன்று எந்த அசம்பாவிதமும் இங்கு நடைபெறவில்லை" என்று கூறியுள்ளார்
இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, "முசாஃபர்பூர் காப்பகத்தில் நடைபெற்ற சம்பவத்தைப் போன்றே கான்பூர் சிறுமிகள் காப்பகத்திலும் நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. உண்மை சம்பவங்கள் மறைக்கப்படுகின்றன. உத்திரப்பிரதேச அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுமிகள் காப்பகத்தில் பல்வேறு மனிதத் தன்மையற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன" என்று குற்றம் சாட்டியுள்ளார்.