இந்தியாவிலிருந்து சீன நிறுவனங்களை விரட்ட முடியாது; சீன பொருள்கள் இல்லாமல் இந்தியத் தயாரிப்புகள் இல்லை. சீனா ஏற்கெனவே, நம்மை கபளீகரம் செய்து விட்டது. இந்த வார்த்தைகள் எல்லாம் உண்மைதானா என்று ஆராய்ந்தல் நிச்சயமாக இலலை. சீன- ஜப்பானிய பொருள்களை தவிர்த்துவிட்டு, வெற்றி பெற்ற மூன்று இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அதற்கு சாட்சியாக உள்ளன. ஆப்ரிக்க நாடுகளிலிருந்து கிட்டத்தட்ட 160 சீன ஆட்டோமொபைல் நிறுவனங்களை இந்த இரு நிறுவனங்களும் இருந்த இடம் தெரியாமல் செய்த விஷயம் பலருக்கும் தெரியாதது.அண்டை நாடானா சீனா மிகப் பெரிய அச்சுறுத்தலாக நம் முன்னே நிற்கிறது. கால்வன் தாக்குதலுக்கு பிறகு, சீன பொருள்களுக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்திய பொருளதாரம் தாராளமயமாக்கப்பட்ட பிறகு, 6 முதல் 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை, சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அலிபாபா, ஜியோமி, டென்சென்ட், சீனா யூரோஷியா பொருளாதா ஒத்துழைப்பு மண்டலம் போன்ற சீன நிறுவனங்கள் இந்திய ஸ்டார்ட்- அப் நிறுவனங்களில் அதிகளவு முதலீடு செய்துள்ளன. பிளிப்கார்ட், ஸ்னேப்டீல், பிக்பேஸ்கேட் கேட், ஸ்விக்கி, பேடிஎம், ஓலா, பைஜூ, மேக்மைட்ரிப் போன்ற இந்திய நிறுவனங்கள் அதிகளவில் சீன முதலீட்டை பெற்றுள்ளன. உலகின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான ஹூபே கூட, இந்தியாவில் பெருமளவு முதலீடு செய்துள்ளது.
இந்தியாவில் செல்போன் விற்பனையில் முதலிடத்தில் இருந்த சாம்சங், நோக்கியா போன்ற நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி விட்டு, சீனாவைச் சேர்ந்த விவோ, ஓப்போ, போன்ற நிறுவனங்கள் சந்தையில் இப்போது முன்னிலை பெற்றுள்ளன. இந்த நிறுவனங்களின் இந்திய சந்தை மதிப்பு 70 சதவிகிதம் என்பதும் அதிர்ச்சியளிக்க கூடிய விஷயம். இந்திய நிறுவனங்களில் மட்டுமல்ல, உலகின் பல முன்னணி நிறுவனங்களில் சீன நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. ஸ்விட்சர்லாந்தின் 'வால்வோ' நிறுவனத்தில் சீனாவின் ஷெஜியாங் கீலே ஹோல்டிங் குரூப் அதிகளவு முதலீடு செய்துள்ளது. இத்தாலியில் 200 நிறுவனங்கள் சீன நிறுவனங்கள் பிடியில் உள்ளன. சீன நிறுவனங்கள் போலவே இந்திய நிறுவனங்களும் உலகின் முன்னணி நிறுவனங்களை தங்கள் வசம் இழுத்துள்ளன. டாடா நிறுவனம் பிரிட்டனின் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தை வாங்கியது. கோரஸ் ஸ்டீல், டெட்லீ டீ நிறுவனங்களையும் டாடா கையகப்படுத்தியுள்ளது. மோட்டார் சைக்கிள் சந்தையில் முன்னணியில் இருக்கும் பஜாஜ் நிறுவனம் ஆஸ்திரியாவின் கே.டி.எம் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் பாதியளவு பங்குகளை கைப்பற்றியிருக்கிறது. பிரிட்டன் மற்றும் தென்ஆப்ரிக்க நாடுகளுக்கிடையேயான போயர் போரின் போது, பிரிட்டன் படைகளுக்கு ராணுவ சீருடை தயாரித்து வழங்கிய பீட்டர் இங்லேண்ட் நிறுவனத்தை இந்தியாவின் ஆதித்யா பிர்லா குழுமம் கைப்பற்றியுள்ளது. இப்படியாக, ஒவ்வொரு பெரும் நிறுவனங்களும் மற்ற நாட்டு நிறுவனங்களை கையகப்படுத்த ஏதோ ஒரு வகையில் முனைப்பு காட்டிக் கொண்டுதானிருக்கின்றன.
சீன பொருள்களை புறக்கணிப்பதற்கு முன், அந்த நாட்டு பொருள்களை ஏற்கெனவே தவிர்த்து பெருமளவு வெற்றி கண்ட மூன்று நிறுவனங்களை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த நிறுவனங்கள் இப்போதும் இந்தியாவில் வெற்றிக்கரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆட்டோமொபைல் துறையைச் சேர்ந்த பஜாஜ், டி.வி.எஸ் மற்றும் ஹீரோ நிறுவனங்கள்தான் அவை. இந்த மூன்று ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை அமைத்து வெற்றி கண்டிருக்கின்றன. இந்திய கல்லூரி, பல்கலைக்கழகங்ளில் இருந்து திறமைசாளிகளை அடையாளம் கண்டு தேடி தேடி பணி வாய்ப்புகள் அளித்தன. இதனால், சீன பொருள்களுக்கு இணையாக பதிய கண்டுபிடிப்புகள் மலிந்தன. உற்பத்தி திறன் அதிகமானது. சீன பொருள்கள் மற்றும் கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவது தவிர்க்கப்பட்டது. ஒரு காலத்தில் இந்திய நிறுவனங்கள் மோட்டார்சைக்கிள் தொழில்நுட்பத்துக்கு ஜப்பானிய நிறுவனங்களையே சார்ந்திருந்தன. இப்போது, ஜப்பானிய நிறுவனங்களான ஹோண்டா, கவாஸகி, சுசூகி போன்றவற்றின் தொழில்நுட்பம் தேவையில்லை என்கிற நிலையும் உருவாகியுள்ளது. தற்போது, இந்த நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பு இல்லாமலேயே வெற்றிக்கரமான நிறுவனங்களாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.
பஜாஜ் நிறுவனம் கே.டி.எம் நிறுவனத்தை வாங்கியதோடு நின்று விடவில்லை. ஸ்வீடன் மோட்டார் சைக்கிள் நிறுவனமான ஹஸ்குவர்ணாவையும் பஜாஜ் வாங்கியது. இதனால், பஜாஜ் நிறுவனத்தின் தயாரிப்புகளின் தரத்தையும் விரைவாக மேம்படுத்த முடிந்தது. வளர்ந்து வரும் திறமையாளர்களை கண்டறிய, பஜாஜ் கேம்பஸ் இண்டர்வியூ பயன்பட்டது. புதுமையான விஷயங்களை கண்டுபிடிக்க இந்த நிறுவனம் உருவாக்கிய உலகத் தரம் வாய்ந்த ஆர் அன்ட் டி மையங்கள் உதவின. தற்போது, பஜாஜ் ரக பைக்குகள் ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் வெகு பிரபலம். ஒரு காலத்தில் நொடிந்து போன நிறுவனமாக பார்க்கப்பட் பஜாஜ் ஸ்கூட்டர் நிறுவனம்தான் இப்போது விண்ணை எட்டியுள்ளது. இந்த நிறுவனத்தின் தலையெழுத்தை மாற்றியெழுதியது 'பல்ஸர்' என்ற புதுமையான கண்டுபிடிப்பு. நவீனத்துக்கும் புதுமைக்கும் கொடுத்த முக்கியத்துவம்தான் பஜாஜ் நிறுவனத்தை காலத்துக்கு ஏற்ற வகையில் முன்னேற்றத்தை நோக்கி அழைத்து சென்றுள்ளது.
உலகில் இன்று 70 சர்வதேச நாடுகளுக்கு பஜாஜ் நிறுவனம் தன் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கிறது. அதோடு, பஜாஜ் மற்றும் டி.வி.எஸ் நிறுவனங்கள் ஆப்ரிக்க மோட்டார் சைக்கிள் சந்தையில் 50 சதவிகிதத்தை கட்டுக்குள் வைத்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆப்ரிக்க நாடுகளில் டூ வீலர்களை 'பொடா பொடா ' என்று அழைக்கிறார்கள். சரக்கு கொண்டு செல்வது, மனிதர்கள் பயணத்துக்கு பொடா பொடா தகுந்த உதவிக்கரமாக இருப்பதாக ஆப்ரிக்க மக்கள் கருதுகிறார்க்ள். இதனால், ஆப்ரிக்க நாடுகளில் டூ வீலர்களுக்கு அமோக வரவேற்பு உண்டு. ஒரு காலத்தில் ஆப்ரிக்காவில் 90 முதல் 95 சதவிகித இரு சக்கர வாகனச் சந்தையை 200 சீன நிறுவனங்களிடத்தில் இருந்தன. இது 15 ஆண்டுகளுக்கு முன்பு. இப்போதோ , அந்த நிறுவனங்கள் நாற்பதாக சுருங்கி விட்டன. காரணம் இந்திய நிறுவனங்களில் படையெடுப்பு. இரண்டே இந்திய நிறுவனங்கள் கிட்டத்தட்ட 150 சீன நிறுவனங்களின் கதையை முடித்து விட்டன.
கடந்த 2014 - ம் ஆண்டு ஹீரோ நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் தலைமை தொழில்நுட்ப பிரிவு தலைவராக பி.எம். டபிள்யூ நிறுவனத்தில் பல ஆண்டு காலம் பணியாற்றிய மார்கஸ் பிரவுன்ஸ்பெர்கர் பொறுப்பேற்றார். தன் அனுபவ அறிவை ஹீரோ மோட்டார்சைக்கிள் நிறுவனத்தில் அவர் பயன்படுத்தினார். இந்த நிறுவனம், அதிகளவு மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்யவும் காரணமாக இருந்தார். இதனால் , உலகிலேயே அதிகளவு மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்ற பெருமை ஹீரோ நிறுவனத்துக்குக் கிடைத்தது. இதே காலக்கட்டத்தில், டி.வி.எஸ் நிறுவனம் ஜெர்மனியின் பி.எம். டபிள்யூ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் மூலம் சீன , ஜப்பானிய நிறுவனங்களுக்கு பலத்த அடி விழுந்தது. இந்தியாவிலேயே பி.எம்.டபிள்யூ பைக்குகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும உரிமையை டிவி.எஸ் நிறுவனம் பெற்றது. இதற்கு , ஈடாக டி.வி.எஸ் ரக மோட்டார் சைக்கிள்களை சர்வதேச தரத்துக்கு இணையாக உற்பத்தி செய்ய பி.எம்.டபிள்யூ நிறுவனம் தொழில்நுட்பங்களை வழங்குகிறது.
மோட்டார் சைக்கிள் உற்பத்தித் துறையில் டி.வி.எஸ், பஜாஜ், ஹீரோ நிறுவனங்கள் சீன நிறுவனங்களை முடக்கியது போல மற்றத்துறைகளிலும் இந்திய நிறுவனங்கள் சீன தயாரிப்புகளை முடக்கிப் போட முடியும். குறைந்த செலவில் இருந்து சீனாவிலிருந்து கிடைக்கும் தயாரிப்புப் பாகங்களை வாங்குவதை தவிர்த்தாலே இந்திய சந்தைகளில் சீன பொருள்களின் ஆதிக்கத்தை எளிதாக கட்டுக்குள் கொண்டு வந்து விட முடியும். முக்கியமாக மருந்து உற்பத்தித் துறையிலும் இந்தியா பெருமளவு சீன மூலப் பொருள்களை சார்ந்துள்ளது உலகின் மிகப் பெரிய மருந்து உற்பத்தியாளர் இந்தியா, ஆனால் மூலப்பொருட்களுக்காக சீனாவை நாம் பெரிதும் நம்பியிருப்பது பின்னடைவே! இப்போதும், மருந்துகளை தயாரிப்பதற்கான மொத்த மூலப்பொருட்களில் 80 சதவீதம் சீனாவிலிருந்து நாம் இறக்குமதி செய்கிறோம். கடந்த 2019- ம் ஆண்டு நிதியாண்டில் இந்தியா , சீனாவிலிருந்து ரூ .17,400 கோடி மதிப்புள்ள மருந்து மூலப் பொருள்களை இறக்குமதி செய்துள்ளது. இத்தனை ஆண்டு காலம் விட்டு விட்டோம். இனியாவது, சுதாரித்துக் கொண்டு சுய சார்பு பொருளதாராமாக எழுந்து நிற்க வேண்டியது அவசியம் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
தற்போது, மத்திய அரசே சீன பொருள்களுக்கு தடை விதிக்கும் மனோபாவத்தில் உள்ளது. இந்திய நிறுவனங்கள் இதை பொன்னான வாய்ப்பாக பயன்படுத்தி சீன பொருள்களை தவிர்ப்பதே நல்லது. இதற்காக, ஹீரோ, பஜாஜ் மற்றும் டி.வி.எஸ் நிறுவனங்கள் பின்பற்றிய வழி முறைகளைப் குறித்து ஆலோசிப்பது நல்ல பயனளிக்கும்.