பன்னாட்டு விமானச் சேவைகளைத் தொடங்குவது பற்றிய முடிவு பிற நாடுகளின் முடிவைச் சார்ந்தே அமையும் என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
காணொலியில் பேசிய அவர், வெளிநாட்டினரை அவர்களின் நாட்டுக்கு அனுப்பி வைப்பதும், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களைத் திரும்ப அழைத்து வருவதும் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பன்னாட்டு விமானப் போக்குவரத்தைத் தொடங்குவது, பிற நாடுகள் நமது விமானங்களைத் தரையிறங்க அனுமதிப்பதைச் சார்ந்தே உள்ளதாகத் தெரிவித்தார்.
பிற நாடுகள் தங்கள் நாட்டவரைத் தவிரப் பிறரை வெளிநாடுகளில் இருந்து அனுமதிக்கவில்லை என்றும், அதே நிலைப்பாட்டில் தான் இந்தியாவும் உள்ளதாகவும் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து இந்த ஆண்டு இறுதியில் முழு அளவை எட்டும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.