வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக இந்தியாவுடன் நடத்த இருந்த ஆலோசனையை பாகிஸ்தான் புறக்கணித்து விட்டது.
இந்தியாவின் வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் பரவி விவசாய நிலங்களில் சேதத்தை ஏற்படுத்தி வருவது போல, பாகிஸ்தானிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதுகுறித்து கூட்டாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்க இந்தியாவும், பாகிஸ்தானும் முடிவு செய்திருந்தன.
இருநாடுகள் இடையே ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்திலுள்ள முனாபோ பகுதியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெறவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அதில் பங்கேற்காமல் பாகிஸ்தான் புறக்கணித்து விட்டது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது இந்தத் தகவலை இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவ் தெரிவித்தார். பாகிஸ்தான் எதற்காக ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது என்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.