இந்தியா - சீனா இடையே எல்லையில் மோதல் நீடித்து வரும் நிலையில், 500 வகையான சீனப் பொருட்களை பட்டியலிட்டு அவற்றை புறக்கணிக்கப் போவதாக “கெய்ட்” என்றழைக்கப்படும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதன் முதல் கட்டமான டிசம்பர் 2021க்குள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் சுமார் ஒரு லட்சம் கோடி பற்றாக்குறையை பூர்த்தி செய்ய உள்ளதாக “கெய்ட்” அமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேவால் கூறியுள்ளார்.
இந்த 500 பொருட்களில் பொம்மைகள், துணிகள், அன்றாட பொருட்கள், சமையலறை பொருட்கள், ஹார்டுவேர்கள் உள்ளிட்டவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தயாரிப்புகளே நமது பெருமை என்று தெரிவித்துள்ள கெய்ட் அமைப்பு, சீன பொருட்களின் விளம்பரங்களில் நடிக்க இந்திய திரை நட்சத்திரங்கள் இனி ஒப்பந்தங்கள் போட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.