கடன்களைத் திருப்பிச் செலுத்துவதைத் தள்ளி வைத்துள்ள காலத்துக்கு வட்டிக்கு வட்டி கணக்கிட்டுப் பெறுவது நியாயமில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வங்கிகளில் பெற்ற கடன்கள், கடன் தவணைகள் திருப்பிச் செலுத்துவது ஆகஸ்டு 31ஆம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அந்தக் காலத்துக்கு வட்டி கணக்கிட்டு முதலுடன் சேர்க்கப்படும் என வங்கிகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் வட்டியைத் தள்ளுபடி செய்யக் கோரிக் கஜேந்திர சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூசண், சஞ்சய் கிசன் கவுல், ஷா ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, வட்டிக்கு வட்டி கணக்கிட்டுப் பெறுவது நியாயமில்லை எனத் தெரிவித்தனர்.
கடன் தள்ளி வைப்பை அறிவித்து விட்டு எல்லாவற்றையும் வங்கிகள் தீர்மானிக்க விட்டுவிட முடியாது என்றும், இதில் அரசு தலையிட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இது பற்றிப் பரிசீலிக்க மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் கூடுதல் காலக்கெடு வழங்கிய நீதிபதிகள் ஆகஸ்டு முதல் வாரத்துக்கு வழக்கைத் தள்ளி வைத்தனர்.