மகாராஷ்டிரா, மும்பையில் மட்டும் 451 கொரோனா நோயாளிகளின் இறப்பு பற்றிய தகவல்கள் மறைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தத் தகவலால் மகாராஷ்டிராவில் கொரோனா நோய் தோற்றால் ஏற்பட்ட இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்தியாவிலேயே கொரோனா நோய்த் தொற்றால் மகாராஷ்டிரா மாநிலம் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு சுமார் 4000 பேர் வரை இறந்திருக்கிறார்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் மும்பையில் மட்டும் குறைந்தபட்சம் 451 இறப்புகள் கொரொனா இறப்பு விகிதத்தில் பதிவு செய்யப்படாமல் விடுபட்டிருக்கிறது என்று தணிக்கை செய்த BMC (Brihanmumbai Municipal Corporation) மகாராஷ்டிரா அரசிடம் தெரிவித்திருக்கிறது.
கொரோனோ நோய்த் தொற்று ஏற்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கையைத் தணிக்கை செய்த ஏழு பேர்கொண்ட BMC குழுவினரால் இந்தத் தகவல் வெளியாகியிருக்கிறது.
BMC மகாராஷ்டிரா அரசிடம், 'மும்பையில் மட்டும் 451 இறப்புகள் பதிவு செய்யப்படாமல் விடுபட்டிருக்கின்றன. இவற்றில் மூன்று பேர் மட்டும் தற்கொலை, விபத்து உள்ளிட்ட காரணங்களால் இறந்திருக்கிறார்கள். மீதி 20 பேர் பெயர் மீண்டும் மீண்டும் இரண்டு முறை வந்திருக்கிறது. எஞ்சியிருக்கும் 371 பேர் எப்படி இறந்தார்கள் என்று எந்த விவரமும் இல்லை. இவர்களில் எட்டு கொரோனா நோயாளிகள் மற்ற உடல் உபாதைகளால் இறந்திருப்பதையும் அறிய முடிகிறது. மீதியிருக்கும் அனைவரும் கொரோனாவால் இறந்தவர்களாக இருக்கலாம்" என்று கூறியிருக்கிறது.
இது குறித்து கருத்து கூறியிருக்கும் சுகாதார அதிகாரிகள், "மகாராஷ்டிரா அரசால் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக (ICMR) இணையதள போர்ட்டலில் பதிவேற்றுவதில் ஏற்பட்ட தவற்றால் இந்த முரண்பாடு' ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தவறு ஜூன் 6 - ம் தேதி வரை நடந்திருக்கிறது. அதன் பிறகு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தகவல் தெரிவித்து, விடுபட்டிருக்கும் கொரோனா நோயாளிகள் மற்றும்இறந்தவர்களின் எண்ணிக்கையைப் பதிவேற்றச் சொல்லிக் கட்டளையிட்டோம். தவறவிடப்பட்ட தகவல்கள் ஜூன் 15 - ம் தேதிக்குள் மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டன. மாவட்ட ரீதியாகப் பதிவு செய்யப்பட்ட தகவல்களை ஆராயும் போது மும்பையில் மட்டும் 451 கொரோனா நோயாளிகள் பதிவு செய்யப்படாமல் விடுபட்டிருப்பதைக் கண்டுபிடித்தோம். இது குறித்து விசாரித்து வருகிறோம்" என்று கூறியிருக்கிறார்கள்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், 'விபத்து, தற்கொலை தவிர மற்ற அனைத்து கோரோனோ இறப்பையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்' என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து மகாராஷ்டிரா தலைமைச் செயலாளர் அஜய் மேத்தா, "கொரோனா நோயாளிகள் மற்றும் இறப்பு விகிதத்தை அறிவிப்பதில் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறோம். தற்போது மீண்டும் புள்ளி விவரங்களைச் சேகரித்து வருகிறோம். எண்ணிக்கையைப் பதிவேற்றம் செய்ததில் ஏற்பட்ட மனிதத் தவறே இதற்குக் காரணம். இந்தத் தவற்றில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று கூறியிருக்கிறார்.
கொரோனா நோய்த் தொற்றால் தேசிய இறப்பு விகிதம் 2.8% ஆக இருக்கும் நிலையில் மும்பையில் தற்போது 3.7 % ஆக உள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் தகவலால் இறப்பு விகிதம் 4.5% ஆக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசியலில் இந்தத் தகவல் புயலைக் கிளப்ப ஆரம்பித்திருக்கிறது.
மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான தேவேந்திர பட்நாவிஸ், "950 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இறப்பை அரசு மறைத்திருக்கிறது. இது மன்னிக்க முடியாத குற்றச்செயல்" என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.