இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக ஊழியர்கள் 2 பேர் பாகிஸ்தான் காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், இந்தியாவின் கடும் கண்டனத்தை தொடர்ந்து விடுவிக்கப்பட்டனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக விசா பிரிவு ஊழியர்கள் 3 பேர் போலி அடையாள அட்டைகளை வைத்துக் கொண்டு, இந்திய ராணுவம் தொடர்பாக உளவு பார்த்தது கண்டறியப்பட்டதால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்குப் பின் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு, பாகிஸ்தான் உளவுப் பிரிவினர் மறைமுகமாக மிரட்டல் விடுத்து வருவதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், நேற்று காலை அலுவல் தொடர்பாக வெளியே சென்ற இந்திய தூதரக ஊழியர்கள் இருவர் திடீரென மாயமாகினர். இந்தியாவின் உளவாளிகளாக சித்தரிக்க திட்டமிட்டு, பாகிஸ்தான் அதிகாரிகள் இருவரையும் கடத்திச் சென்றிருக்கலாம் என கருதப்பட்டது.
இதுதொடர்பாக, மத்திய அரசு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது. சில மணி நேரங்கள் கழித்து இந்த இரண்டு பேரும் சென்ற வாகனம் நடந்து சென்ற ஒருவரை இடித்து விட்டதாகவும், அதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இதனிடையே, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியை வரவழைத்த வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனத்தை தெரிவித்தது. அவர்கள் மீது எந்த விசாரணையும் நடத்தக்கூடாது என்றும், அவர்களை துன்புறுத்தக்கூடாது எனவும் கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டது.
இந்திய தூதரக ஊழியர்களின் பாதுகாப்புக்கு பாகிஸ்தான் அரசே பொறுப்பு என்றும் அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய தூதரக ஊழியர்கள் இருவரையும் பாகிஸ்தான் போலீஸ் ஜாமீனில் விடுவித்துள்ளது.
இதனிடையே, போலீஸ் விசாரணையின்போது தூதரக ஊழியர்கள் தாக்கப்பட்டதாகவும், அதில் அவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.