கொரோனா உயிரிழப்பு பத்தாயிரத்தை நெருங்கிவரும் நிலையில், ஊரடங்கு தளர்வு, நோய்ப் பரவலை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்றும் நாளையும் ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு இதுவரை 5 தடவை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
ஆனால், கடந்த 15 நாட்களில் தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா , டெல்லி, குஜராத் ஆகிய மாநிலங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்தவண்ணம் உள்ளது.
இந்நிலையில் இன்று பஞ்சாப், அஸ்ஸாம், கேரளா, உத்தரகாண்ட், வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
நாளை பிற்பகல் 3 மணிக்கு தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா, குஜராத்,டெல்லி உள்பட 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுடன் மோடி இணைய வெளி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.
ஊரடங்கு தளர்வின் மூலம் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அதே நேரத்தில் வேகமாகப் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதும் மத்திய மாநில அரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்குகிறது. இப்பிரச்சினை குறித்து மோடி ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் மாநில அரசுகளுக்கு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை தமது மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகமுடைய மாநிலங்களில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. இதனை மாநில முதலமைச்சர்களுடனான ஆறாவது சுற்று ஆலோசனையின் போது மோடி வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.