பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் பணியாற்றிவந்த இந்தியத் தூதரக உயர் அதிகாரிகள் இருவர் திடீரென்று காணாமல் போயிருப்பதாகப் பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த விவகாரத்தைப் பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். மேலும் இரண்டு உயர் அதிகாரிகளையும் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகத் தொடர்புகொள்ள முடியவில்லை, உடனடியாகக் கண்டுபிடிக்க வேண்டும் என்று இந்தியா பாகிஸ்தானிடம் வலியுறுத்தியிருக்கிறது.
இதற்கு முன்பு, டெல்லியில் பணியாற்றி வந்த பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவரை இந்தியா நாட்டைவிட்டு வெளியேற்றியது. மே மாதம் 31 - ம் தேதி, டெல்லி கரோல் பா பகுதியில் இருவரிடமிருந்து ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து இருவரும் இந்தியாவுக்கு எதிராக உளவு பார்த்ததாகக் கூறி ஜூன் 1 - ம் தேதி பாகிஸ்தான் இஸ்லாமாபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இரண்டு தூதரக அதிகாரிகளும் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் விசா தொடர்பான பகுதியில் பணியாற்றிவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இருவரிடமிருந்தும் நசீர் கோதம் எனும் போலியான ஆதார் கார்டு, இரண்டு ஆப்பிள் போன்கள், 15000 ரூபாய் ரொக்கப்பணம், ஆகியவையும் இந்திய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
இந்த சம்பவத்துக்கு எதிர்வினையாகத் தான் இரண்டு இந்தியத் தூதரக உயர் அதிகாரிகள் கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது சிறைபிடிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, 'வியன்னா மாநாடு ஒப்பந்தப்படி, பாகிஸ்தானில் பணியாற்றும் இந்தியத் தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்குத் தேவையான பாதுகாப்பைப் பாகிஸ்தான் அரசு உறுதிசெய்ய வேண்டும்' என்று இந்திய அரசு பாகிஸ்தானிடம் கோரியுள்ளது.
இது குறித்து நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியது. அதன்படி பாகிஸ்தான் தூதரக அதிகாரி சையது ஐதர் ஷா வெளியுறவு அமைச்சகத்துக்குச் சென்று விளக்கம் அளித்தார். அப்போது இந்திய அதிகாரிகள் இருவரையும் அவர்களின் காருடன் இந்தியத் தூதரகத்துக்கு உடனடியாகத் திருப்பி அனுப்ப வேண்டும் என அவரிடம் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.