கொரோனா நோயால் உலகமே துவண்டு போய் கிடக்கிறது. உலகம் முழுக்க லட்சக்கணக்கான மக்கள் வேலையை இழந்து வருகின்றனர். எந்த முன்னறிவிப்புமில்லாமல் நிறுவனங்கள் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குகின்றன. ஆனால், ஷார்ஜாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் , எலைட் குரூப் நிறுவனமோ, இந்த பேரிடர் காலத்தில் தங்கள் பணியாளர்களுக்கு தேவையான அத்தனை உதவிகளையும் உடனிருந்து செய்து வருகிறது. தங்கள் நிறுவனத்தில் பணியாற்றிய ஒரு பணியாளரை கூட இந்த நிறுவனம் கை விடவில்லை.
ஷார்ஜாவில் எலைட் குரூப்புக்கு சொந்தமாக 12 நிறுவனங்கள் உள்ளன. இதில், பணிபுரிபவர்கள் பெரும்பாலும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். தற்போது, கொரோனா காரணமாக தங்கள் பணியாளர்களை தாய்நாட்டுக்கு அனுப்ப எலைட் குரூப் நிறுவுனர் ஹரிகுமார் முடிவு செய்தார். முதல்கட்டமாக 120 தொழிலாளர்களை தனி விமானத்தில் தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் . ஷார்ஜா விமான நிலையத்தில் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்த 50 இந்தியர்களும் அதே விமானத்தில் தாய்நாட்டுக்கு திரும்பினர். யாரிடமும் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.
பி.பி. இ உடைகள், மாஸ்க்குகள், சானிடைஸர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. மொத்தம் 170 பேரை ஏற்றிக் கொண்டு அந்த தனி விமானம் நேற்று கொச்சி வந்தது. கொச்சியிலிருந்தும் அவரவர் ஊர்களுக்குச் செல்லவும் சிறப்பு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தாய்நாடு வந்த எலைட் குரூப் பணியாளர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு நிம்மதியாக போய் சேர்ந்தனர்.
இது குறித்து எலைட் குரூப் தலைவர் ஹரிகுமார் கூறுகையில், '' தாய்நாடு திரும்பும் அனைத்து ஊழியர்களுக்கும் மூன்று மாதம் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒரு மாத சம்பளமும் அளித்துள்ளோம். தாய்நாடு திரும்பினாலும் எந்த நிதி நெருக்கடி ஏற்பட்டாலும், உடனடியாக தொடர்பு கொள்ள கூறியிருக்கிறேன். கொரோனா அச்சம் விலகிய பிறகு, மீண்டும் அனைவரும் ஷார்ஜா அழைத்து வரப்படுவர். கோவையிலும் எங்கள் நிறுவனத்துக்கு அலுவலகம் உள்ளது. அங்கே பணி புரிய விரும்புபவர்களுக்கு கோவையில் வேலை செய்ய ஏற்பாடு செய்து தரப்படும். கடந்த மூன்று மாதங்களாக எஙகள் நிறுவன ஊழியர்கள் மனதளவில் சோர்வடைந்துள்ளனர். உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்பதை உணர்த்ததே இந்த காரியத்தை செய்துள்ளோம்'' என்கிறார்.
ஆழப்புலாவை சேர்ந்த ஹரிகுமார் சவுதி அரேபியாவுக்கு வேலை தெடி சென்று தொழிலதிபராக உயர்ந்தவர். இந்த பேரிடர் காலத்தில் ஊழியர்களுக்கு பக்கபலமாக நிற்கும் ஹரிகுமார் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்தான்!