அசாமின் பாக்ஜன் எரிவாயுக் கிணற்றில் பற்றி எரியும் தீயைக் கட்டுப்படுத்துவது குறித்து அமெரிக்க எரிசக்தி துறை அதிகாரிகளுடன், இந்திய அதிகாரிகள் காணொலியில் ஆலோசித்தனர்.
அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் பாக்ஜன் எரிவாயுக் கிணற்றில் மே 27ஆம் தேதி முதல் கசிவு ஏற்பட்டது. கடந்த பத்தாம் தேதி எரிவாயுக் கிணற்றில் தீப்பற்றியது. தீயணைக்கும் முயற்சியின்போது தீயணைப்பு வீரர்கள் இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்நிலையில் தீயைக் கட்டுப்படுத்துவது, எரிவாயுக் கிணற்றை மூடுவது ஆகியவை குறித்து அமெரிக்க எரிசக்தி துறை அதிகாரிகளுடன், பெட்ரோலிய அமைச்சகத்தின் அதிகாரிகள் காணொலியில் விவாதித்துள்ளனர்.
வெள்ளியன்று நடைபெற்ற ஆலோசனையில் சிங்கப்பூர் வல்லுநர்களும் பங்கேற்றனர். இந்தியா - அமெரிக்கா இடையே எரிசக்தி துறையில் செய்துகொண்ட உடன்பாட்டின்படி இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.