உத்திரப்பிரதேச மாநிலம், ஜான்சியில் திறந்த நிலை ஜிம் ஒன்றிலிருந்து வெளியாகியிருக்கும் வீடியோ அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியிருக்கிறது. மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இரண்டு புல் -அப்ஸ் இயந்திரங்கள் புறவிசையின்றி, மனிதர்கள் யாரும் இயக்காமல் தானாக இயங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
சுமார் இருப்பது வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில் மனிதர்கள் யாரும் இல்லாமல் தானாக இரண்டு புல் - அப்ஸ் இயந்திரங்கள் மட்டும் மேலும் கீழும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அருகில் காவலர்கள் சிலர் ஆச்சரியத்துடன் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இயற்கைக்கு மாறாக நிகழும் இந்த வீடியோவானது வாட்ஸாப், ஃபேஸ்புக், டுவிட்டரில் வைரலாகப் பரவிவருகிறது.
ஜான்சி, நந்தன்பூராவில் உள்ள கன்ஷிராம் பூங்காவில் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது. 'பேய்கள் ஜிம் பயிற்சி செய்கின்றன' என்று பரப்பரப்பைக் கிளப்பியிருக்கிறது. விஷமத்தனத்துடன் சிலர் இந்த வீடியோவை சிலர் பரப்பியிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள் காவலர்கள்.
இந்த வீடியோ குறித்து காவல் அதிகாரிகள் கூறுகையில், "இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சம்பந்தப்பட்ட பூங்காவிற்குச் சென்றோம். அங்கு திறந்தவெளியில் உள்ள இரண்டு புல் - அப்ஸ் இயந்திரங்களில் அளவுக்கு அதிகமாக கிரீஸ் பூசப்பட்டுள்ளது. அதனால், ஒரு முறை அதை இயக்கினால் அடுத்த சில வினாடிகளுக்குத் தானாகவே இயங்குகின்றன. அதைத்தான் ஒரு சிலர் விஷமத்தனத்துடன் 'பேய்கள் ஜிம் பயிற்சி செய்கின்றன' என்று வீடியோ செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பியிருக்கிறார்கள். பேய் வீடியோவை வெளியிட்டிருப்பவர்கள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள்" என்று தெரிவித்திருக்கிறார்கள்.