டெல்லியில் கடந்த 12 நாட்களில் மட்டும் கொரோனா பரவல் வீதம் 21 சதவீதம் அதிகரித்திருப்பதோடு, குணமடைவோர் விகிதமும் 8 சதவீதம் குறைந்துள்ளது. மே 30 முதல் ஜூன் 11ம் தேதி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மே மாதம் 44 சதவீதமாக இருந்த குணமடைவோர் விகிதம், ஜூன் மாதத்தில் 36 சதவீதமாக குறைந்துள்ளது.
ஜூன் 1 முதல் 11ம் தேதி வரை 58 ஆயிரத்து 732 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 14 ஆயிரத்து 743 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஜூன் மாதத்தின் தொற்று பரவல் விகிதம் அதிகரித்துள்ளது.
அதே போல் வியாழனன்று 1,877 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஒரே நாளில் பாதிக்கப்படுவோரின் விகிதமும் 35 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்தது. இந்த திடீர் தொற்று அதிகரிப்பு கவலையளிப்பதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், வரும் காலங்களில் இது மேலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளனர்.