கொரோனோ வைரஸ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுக் காணாமல் போன 82 - வயது பாட்டியின் உடல் எட்டு நாள்களாக கழிவறையில் கிடந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மகாராஷ்டிரா, ஜல்கான் மாவட்டத்தைச் சேர்ந்த புசாவால் பகுதியைச் சேர்ந்த 82 வயது மூதாட்டி சளி, இருமல், காய்ச்சலுக்காக ஜல்கான் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஜல்கான் சிவில் மருத்துவமனையானது ஜல்கான் மாவட்டத்தின் கோரோனோ சிகிச்சை மையமாகத் திகழ்கிறது. ஜூன் 1 - ம் தேதி, வார்டு எண் 7 - ல் அனுமதிக்கப்பட்ட மூதாட்டிக்கு நடந்த சோதனையில் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு அவர் காணாமல் போனார். அவரைப் பற்றிய தகவல் யாருக்கும் கிடைக்கவில்லை. ஆனால், எட்டு நாள்கள் கடந்த நிலையில் அவரது உடல் மருத்துவமனையில் உள்ள கழிவறையில் அழுகிய நிலையில், துர்நாற்றம் வீசும் நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து பேசிய மருத்துவமனை நிர்வாகம், "ஜூன் 2 - ம் தேதி மூதாட்டி காணாமல் போனது பற்றி உறவினர்களுக்கும் காவல் துறைக்கும் புகார் தெரிவிக்கப்பட்டது" என்று தெரிவிக்கிறது. ஆனால், காவல் துறை கண்காணிப்பாளர், "முதியவர் காணாமல் போனது பற்றி ஜூன் 6 - ம் தேதிதான் எங்களுக்குப் புகார் வந்தது. இந்த சம்பவம் பற்றி விரிவாக விசாரணை செய்து வருகிறோம்" என்று தெரிவித்திருக்கிறார். காவல் துறையினரும் மருத்துவமனை நிர்வாகமும் முரண்பட்ட தகவலைக் கூறுகிறார்கள்.
இந்த சம்பவத்துக்கு ஜல்கான் மாவட்ட பாதுகாவலர் அமைச்சர் குலாபராவ் தனது வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார். இந்த குற்றச் சம்பவத்துக்கு யார் காரணமோ அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். ஜல்கான் மாவட்ட ஆட்சித்தலைவர் அவினாஷ் தாக்னே, "இது மன்னிக்க முடியாத குற்றம். இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.
மருத்துவமனைக்கு கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக வந்த பாட்டி கழிவறையில் 8 நாட்களாக இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் மருத்துவமனை ஊழியர்கள் யாரும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கழிவறையை சுத்தம் செய்வதற்குக் கூட செல்லவில்லை என்பதையே உணர்த்துகிறது. இந்த சம்பவம் கொரோனா வைரசால் மகாராஷ்டிராவில் மிக மோசமான பாதிப்பு உருவாவதையே காட்டுகிறது.