மகாராஷ்டிரத்தின் புல்தானா மாவட்டத்தில் உள்ள லோனார் ஏரி ஒரேநாளில் செந்நிறமாக மாறியுள்ளது உள்ளூர் மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் விண்கல் விழுந்ததால் ஏற்பட்ட பள்ளத்தால் லோனார் ஏரி உருவானதாகக் கருதப்படுகிறது. உள்நாட்டுப் பரப்பில் உள்ள இந்த ஏரியின் நீர் உவர்நீராக உள்ளது இன்னொரு தனிச்சிறப்பாகும்.
வறட்சியால் ஒரு கிலோமீட்டர் விட்டத்துக்குச் சுருங்கிப் போயுள்ள லோனார் ஏரியின் நீர்ப்பரப்பு திடீரென ஒருநாள் செந்நிறமாக மாறியது உள்ளூர் மக்கள், இயற்கை ஆர்வலர்கள், புவி அறிவியலாளர்கள் ஆகியோரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
லோனார் ஏரி நிறம் மாறுவது ஒன்றும் புதிதல்ல என்றும், இம்முறை மிக அதிக அளவில் நிறம் மாறியுள்ளதாகவும் அதைத் தொடர்ந்து உற்றுநோக்கி வருபவர்கள் தெரிவித்துள்ளனர்.
நீரின் அளவு குறைந்து உவர்த் தன்மை அதிகரித்ததாலும், நீரில் உள்ள ஆல்காக்களாலும் நிறம் மாறியிருக்கக் கூடும் என்றும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.