கொரோனா காரணமாக நாட்டில் மருத்துவர்கள், செவிலியர்கள் ஓய்வில்லாமல் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆயிரக்கணக்கான சுகாதாரப் பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனினும், மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஓய்வில்லாமல் மருத்துவர்கள் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், டெல்லி மாநகராட்சிக்குட்பட்ட கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையில் பணிபுரியும் ரெசிடென்ட் டாக்டர்களுக்கு மார்ச் மாதம் முதல் சம்பளம் அளிக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து கஸ்தூரபா காந்தி மருத்துவமனை ரெசிடென்ட் டாக்டர்கள் சங்க தலைவர் சுனில் குமார் கூறுகையில், '' மார்ச், ஏப்ரல், மே மாத சம்பளம் இன்னும் தரவில்லை. போராட்டத்தில் ஈடுபட இது தகுந்த காலமில்லை. அதனால், போராட்டம் அறிவிக்கவில்லை. ஆனால், மொத்தமாக ராஜினாமா செய்யும் முடிவில் இருக்கிறோம். அதேவேளையில், எங்கள் சேவையை நிறுத்திக் கொள்ள மாட்டோம். வேறு ஏதாவது மருத்துவமனையில் சேவை புரிவோம் .
மக்கள் எங்களை பாராட்டி கைதட்டுகிறார்கள். கொரோனா வாரியர்ஸ் என்று புகழ்கிறார்கள் . ஆனால், எங்களுக்கு மூன்று மாதங்களாக சம்பளம் தரப்படவில்லை என்பதை மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும். ஜூன் 16- ந் தேதிக்குள் எங்களுக்கு சம்பளம் வழங்கவில்லையென்றால் அனைவரும் மொத்தமாக ராஜினாமா செய்து விடுவோம். சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் எங்கள் பிரச்னையை தீர்ப்பார்கள் என்று நம்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.
கஸ்தூர்பா மருந்துவமனை 450 படுக்கை வசதி கொண்டது. 1000 சீனியர் டாக்டர்கள், 500 ரெசிடென்ட் டாக்டர்கள். 1,500 செவிலியர்கள் இங்கு பணி புரிகின்றனர். இவர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளது.