லடாக் எல்லையில், 4 இடங்களில் மோதல்போக்கில் ஈடுபட்டிருந்த சீனப் படைகள், 3 இடங்களில் இருந்து பின்வாங்கியுள்ளன. அந்த 3 இடங்களில் இருந்து இந்திய படைகளும் முகாமுக்கு திரும்புகின்றன. அதேசமயம், முக்கியமான பகுதியான பாங்காங்சோ பகுதியில் இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது.
கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் 4 இடங்களில் சீனப் படைகளின் அத்துமீறலால் மோதல்போக்கு உருவானது. பாங்காங்சோ ஏரியின் வடகரையில், அத்துமீறி நுழைந்த சீனப் படை வீரர்கள், சுமார் 8 கிலோமீட்டர் தூர இடைவெளி கொண்ட, 4 மலைக்கூம்புகள் அடங்கிய பகுதியை ஆக்கிரமித்துள்ளனர். மே மாதத் தொடக்கத்தில் இருந்து இந்திய வீரர்களின் ரோந்துக்கு இடையூறு விளைவித்தனர்.
இருதரப்புக்கும் இடையே கைகலப்பு, கல்வீச்சு, வீரர்கள் காயம் என நிலைமை தீவிரமடைந்தது. இதேபோல கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் 2 இடங்களிலும், Gogra-Hot Springs என்ற இடத்திலும் இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு சீன படை வீரர்கள் ஊடுருவி வந்தனர். பின்புலப் பகுதியில், தங்களது எல்லைக்குள் கூடுதலாக 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வீரர்களை, பீரங்கிகள், கவச வண்டிகளோடு சீன ராணுவம் களமிறக்கியது. இதற்கு நிகராக இந்தியாவும் ராணுவ வீரர்களையும், கனரக ஆயுதங்களையும் களமிறக்கியது.
லடாக் எல்லையில் அசாதாரண சூழ்நிலை உருவானதைத் தொடர்ந்து, உள்ளூர் ராணுவ தளபதிகள் நிலையில் பல கட்ட பேச்சு நடத்தப்பட்டும் பயன் ஏற்படவில்லை. இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகளிடையே சீனப் பகுதியில் பேச்சு நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை சுமூகமான முறையில் நடைபெற்றதோடு, பேச்சுவார்த்தையை தொடரவும் அதன் மூலம் பிரச்சனையை இணக்கமான முறையில் தீர்த்துக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. இன்று அல்லது நாளை மீண்டும் ராணுவ ஜெனரல்கள் நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கில் இரு இடங்களில் இருந்தும், Gogra-Hot Springs என்ற இடத்தில் இருந்தும் சீனப் படைகள் சற்று பின்வாங்கியுள்ளன.
மோதல்போக்கு நிலவிய 3 இடங்களில் இருந்தும், கடந்த ஓரிரு நாட்களாக சீனப் படை வீரர்கள் பின்வாங்கியுள்ளதாகவும், அதேபோல இந்திய படை வீரர்களும் மோதல் போக்கின் தீவிரத்தை தணித்துக் கொண்டிருப்பதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சுமார் 1 முதல் 2 கிலோமீட்டர் தூரம் வரை இரு தரப்பு வீரர்களும் கனரக ஆயுதங்களுடன் விலகிச் சென்றுள்ளனர்.
அதேசமயம், முக்கியமானதாகக் கருதப்படும் பாங்காங்சோ ஏரி பகுதியில், மோதல் போக்கு நிலைமை இன்னும் தீவிரமாகவே நீடிக்கிறது. ராணுவ ஜெனரல்கள் நிலையில் மேலும் ஒரு சுற்று பேச்சு நடத்தப்பட்ட பிறகே அங்கு சுமூகநிலை ஏற்படக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில், மோதல் போக்கு ஏற்பட்ட 4 இடங்களிலும் ஏப்ரல் மாதத்தில் இருந்த நிலை திரும்ப வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. 3 இடங்களில் இருந்து படைகள் திரும்பிக் கொண்டிருந்தாலும், முழுமையாக பிரச்சனை முடிவுக்கு வந்ததாகக் கருத முடியாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.