கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு உள்பட15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலுள்ள 50 மாவட்டங்கள் மற்றும் மாநகராட்சிகளில் மத்தியக் குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சில பகுதிகளில் மட்டும் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து. அப்பகுதிகளில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு சார்பில், 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலுள்ள 50 மாவட்டங்கள் மற்றும் மாநகராட்சிகளில் மத்திய குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதில் தமிழகத்திற்கு மட்டும் 7 மாவட்டங்களுக்கு மத்திய குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த குழுவில், இரு பொது சுகாதார நிபுணர்கள் அல்லது தொற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் மற்றும் மூத்த இணை செயலாளர் அந்தஸ்து அதிகாரி ஆகிய 3 பேர் இடம்பெற்றுள்ளனர்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு இந்த குழுவினர் உதவும் வகையில் செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கட்டுப்பாட்டு மண்டலங்களை திறம்பட நடைமுறைப்படுத்துதல், நோயாளிகளுக்கு திறம்பட சிகிச்சை அளித்தல், கொரோனா பரிசோதனைகளை அதிகரிப்பது, அடுத்த இரண்டு மாதங்களில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவது, மருத்துவமனைகளில் தேவைப்படும் படுக்கைகளை உறுதி செய்வது, இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவது, கொரோனா பரவல் வேகத்தை குறைப்பது, உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மாநில சுகாதாரத்துறையினருக்கு உதவுவார்கள் என கூறப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியில் மாநில அரசுகளுக்கு உதவி செய்வதே இதற்கான நோக்கம் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்தியக் குழுவுடன் முறையாக ஒருங்கிணைந்து செயலாற்றுவதற்காக மாவட்ட அளவிலான மருத்துவ மற்றும் நிர்வாக அதிகாரிகளைக் கொண்ட, பிரத்யேக சிறப்புக் குழு ஏற்கெனவே அமைக்கப்பட்டு அவை செயல்பட தொடங்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.