ஊரடங்கால் மும்பை விமான நிலையத்தில் 74 நாட்கள் சிக்கித்தவித்த கானா (Ghana) நாட்டு கால்பந்து வீரர் ரென்டி ஜுவன் முல்லர், உள்ளூர் ஹோட்டல் ஒன்றுக்கு மாற்றப்பட்டார்.
கேரள கால்பந்து குழு ஒன்றில் விளையாட வந்த இவர் சொந்த நாட்டுக்கு திரும்பும் வழியில் மும்பை விமான நிலையம் வந்தார். அந்த நேரத்தில் கொரோனா பரவல் காரணமாக பன்னாட்டு விமான சேவைகள் ரத்தானதால் கானா திரும்ப வழியின்றி விமான நிலையத்தில் சிக்கினார்.
கடந்த 74 நாட்களாக விமான நிலைய ஊழியர்களின் உதவியுடன் நாட்களை கழித்த முல்லர் குறித்த தகவல் முதலமைச்சரின் மகனும் மாநில அமைச்சருமான ஆதித்ய தாக்கரேவின் கவனத்திற்கு டுவிட்டர் வாயிலாக தெரிய வந்தது.
இதை அடுத்து சிவசேனா நிர்வாகி உதவியுடன் முல்லர் உள்ளூர் ஹோட்டலுக்கு மாற்றப்பட்டார். 23 வயதான முல்லரின் மன உறுதியை பலரும் பாராட்டும் வேளையில், இந்த சம்பவம் ஹாலிவுட் படமான தி டெர்மினலில், அமெரிக்க விமான நிலையம் ஒன்றில் சிக்கிய டாம் ஹாங்சின் கதாபாத்திரத்தை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.