பாரத ஸ்டேட் வங்கி மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் மூவாயிரத்து 580 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது.
2020 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டின் லாப நட்டக் கணக்கு அறிக்கையை செபி அமைப்பிடம் பாரத ஸ்டேட் வங்கி தாக்கல் செய்துள்ளது. அதில் மூவாயிரத்து 580 கோடியே 81 லட்ச ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இருந்ததைவிட 4 மடங்கு அதிகமாகும்.
2019 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் பாரத ஸ்டேட் வங்கி 838 கோடியே 40 லட்ச ரூபாய் நிகர லாபம் ஈட்டியிருந்தது. கடன்களுக்குப் பெறப்பட்ட வட்டியில், வைப்புத் தொகைகளுக்கு வழங்கிய வட்டியைக் கழித்து 22 ஆயிரத்து 767 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. கோர் பேக்கிங் எனப்படும் தொகுப்பு வங்கிச் சேவைக்கான கட்டணம் என்கிற வகையில் 13 ஆயிரத்து 346 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.
கடந்த ஆண்டைவிட 4 மடங்கு லாபம் ஈட்டியுள்ளதால் பாரத ஸ்டேட் வங்கியின் பங்கு விலை 8 புள்ளி 7 விழுக்காடு உயர்ந்து 189 ரூபாய் 25 காசுகளாக இருந்தது.