ஒரே ஐஎம்இஐ எண்ணில் 13ஆயிரத்து ஐந்நூறு செல்பேசிகள் செயல்பட்டு வருவது குறித்து விவோ நிறுவனத்தின் மீது மீரட் சைபர்கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் தனது செல்பேசியில் குறிப்பிட்டுள்ள ஐஎம்இஐ எண்ணும், அட்டைப்பெட்டியில் குறிப்பிட்டுள்ள ஐஎம்இஐ எண்ணும் வெவ்வேறாக இருப்பதை அறிந்து விவோ சேவை மையத்தில் அதைக் கொடுத்து மாற்றியுள்ளார்.
இது குறித்து சைபர்கிரைம் பிரிவினர் 5 மாதங்களாக விசாரித்ததில் ஒரே ஐஎம்இஐ எண்ணில் 13ஆயிரத்து ஐந்நூற்றுக்கு மேற்பட்ட விவோ செல்பேசிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விவோ சேவை மையத்தின் மீதும், விவோ செல்பேசி தயாரிப்பு நிறுவனம் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொலைத்தொடர்பு விதிமுறைகளின்படி ஐஎம்இஐ எண் இல்லாமல் செல்பேசி விற்பது, அதைத் தவறாகக் கையாள்வது 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றமாகும்.