பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாதில் இந்திய அதிகாரிகளை பாகிஸ்தான் உளவுத்துறையினர் காரிலும் பைக்கிலும் துரத்திச் சென்று துன்புறுத்தும் வீடியோ காட்சிகள் வெளியானதில் இந்தியா பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அண்மையில் இந்தியாவில் போலி ஆதார் கார்டு மூலம் தங்கியிருந்து உளவு பார்த்ததாக 2 பாகிஸ்தானியர்களை கையும் களவுமாகப் பிடித்த டெல்லி போலீசார் வெளியுறவு அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் அவர்களை பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பி வைத்தனர்.
இதன் காரணமாக இஸ்லாமாபாதில் பணியில் உள்ள இந்திய அதிகாரிகளை பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ துன்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது. கவுரவ்அலுவாலியா போன்ற மூத்த இந்திய அதிகாரிகள் வீட்டில் இருந்து செல்லும் போதும் அலுவலகத்தில் இருந்து திரும்பும் போதும் பைக்குகளில் பாகிஸ்தான் உளவு அமைப்பினர் பின்தொடரும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.